உதயநிதி VS கார்த்தி சிதம்பரம்…?உதயநிதியின் கனவுக்கு ஆப்பு வைத்த காங்கிரஸ்…? தமிழக அரசியலில் திடீர் சலசலப்பு!

Author: Babu Lakshmanan
17 November 2023, 8:00 pm
Quick Share

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது வெளிப்படையாக பேசும் விஷயங்கள் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி விடும். இதனால் சில நேரம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளிடமும் அவர் அதிருப்தியை சம்பாதித்து கொள்வதும் உண்டு.

கடந்த மாதம் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த, சோனியாவை தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியபோது கார்த்தி சிதம்பரம் அவரிடம், “2024 தேர்தலில் தமிழகத்தில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் இந்த முறையும் போட்டியிட வேண்டும். அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பமோ, கட்டாயமோ கிடையாது. ஆனால் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய கூடாது’ என்று வலியுறுத்தினார். இதன்மூலம் 2019 தேர்தலை போலவே தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருவது உறுதியாக தெரிகிறது.

காங்கிரஸுக்கு ஐந்து முதல் ஏழு தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் இதுபோல கருத்து தெரிவித்ததால் திமுக தலைமை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானது. முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் பார்வையை தேசிய அளவில் விரிவு படுத்தி வருவதால் 2024 தேர்தலில் திமுக குறைந்த பட்சம் 27 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்துள்ளார், என்கிறார்கள். இதன்படி பார்த்தால் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எஞ்சிய ஐந்து எம்பி சீட்டுகளைத்தான் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு உள்ளது.

காங்கிரசுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பதை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும். காங்கிரஸ் இதில் மூன்று மாநிலங்களை கைப்பற்றி விட்டால் திமுகவிடம்
12 தொகுதிகள் வரை கேட்டு மல்லுக்கட்டும். ஒருவேளை இந்த மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டால் திமுக கொடுக்கும் சீட்டுகளை மட்டும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைக்கு தமிழக காங்கிரஸ் தள்ளப்படும் என்பதுதான் எதார்த்தம்.

கார்த்தி சிதம்பரம் கொளுத்தி போட்ட இந்த சரவெடியின் சத்தமே இன்னும் ஓயாத நிலையில் நவம்பர் 16ம் தேதியன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் அவர் தனது 52-வது பிறந்தநாளை காரைக்குடியில் கொண்டாடினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது,
“இந்தியா கூட்டணி ஒற்றுமையாகவே உள்ளது. சில மாநிலங்களில் சிக்கல் இருக்கிறது. அதை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ளலாம். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றி பெறும். சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வெவ்வேறு கண்ணோட்டத்துடன் வாக்களிப்பார்கள்.

ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்து வருகிறது. இந்த பார்முலாவை மாற்ற காங்கிரஸ் பாடுபடுகிறது. தெலுங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இது நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை, பொருளாதார ரீதியில் வளர்ச்சி என்பதுதான் எங்கள் கூட்டணியின் இலக்கு என கூறியே மக்களிடம் வாக்குகளை கேட்போம்.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டுவது தேவையில்லாத விஷயம். நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளலாமே. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே விரும்புகிறேன். நான் விரும்பும் பதவியும் அதுதான்” என்று முடிவில் ஒரு போடு போட்டார்.

இது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆதரவாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் வரிசை கட்டி நிற்கும் நிலையில் கார்த்தி சிதம்பரம் பகிரங்கமாகவே நான் காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறேன் என்று கூறுவது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை விட திமுகவினரைத்தான் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கார்த்தி சிதம்பரத்தின் ஆசையை அவருடைய தந்தை தனது செல்வாக்கால் எப்படியும் நிறைவேற்றி விடுவார். தவிர அவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால்
ஏற்கனவே சோனியாவிடம் சொன்னது போல் 2019 தேர்தல் போல, எங்களுக்கு ஒன்பது தொகுதிகளை கண்டிப்பாக கொடுங்கள் என்பதில் உறுதியாகவும் இருப்பார். இல்லையென்றால் எங்களுக்கு தமிழகத்தில் வேறு கூட்டணி வாய்ப்புகளும் உள்ளன என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கவும் செய்யலாம்.

இது கூட பரவாயில்லை, கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளையொட்டி அவருடைய ஆதரவாளர்கள் சென்னை நகரம் முழுவதும் ஒட்டிய போஸ்டர்கள்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது.

கார்த்தியின் பிறந்தநாளில் அவரது ஆதரவாளர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் ஏழை எளியோருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினர். மேலும் அந்த பகுதியில் நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என குறிப்பிட்டு அச்சிட்ட போஸ்டர்களையும் ஒட்டினர்.

இந்த போஸ்டர்கள் பெரும்பாலும் திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் நூற்றுக்கணக்கில் ஒட்டப்பட்டிருந்தது. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர்
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று கூறப்படும் அமைச்சர் உதயநிதி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அதிலும் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் பகுதியில்தான் இந்த போஸ்டர்கள் அதிகமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த தொகுதியிலேயே நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரே போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டுகிறார்கள் என்றால் அந்த துணிச்சல் எப்படி வந்தது? என்னும் கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் ஒட்டப்பட்டிருந்த நாளைய முதல்வர் கார்த்தி சிதம்பரம் என்ற போஸ்டர்கள் பல இடங்களில் கிழிக்கப்பட்டும் இருந்தது, என்பதுதான். அதிலும் நாளைய முதல்வர் என்ற வார்த்தையை மட்டும் கிழித்திருந்தனர்.

“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளரவில்லை, அதை வளர்ப்பதற்கு மாநிலத் தலைவர் அழகிரி கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் திமுகவிடம் அடிமையாகி போய்விட்டார் என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அந்தக் குறையை போக்குவதற்காக கூட இதுபோன்ற போஸ்டர்களை கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அச்சிட்டு சென்னை நகரம் முழுவதும் ஒட்டி இருக்கலாம்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கார்த்தி சிதம்பரம் எதிர்பார்ப்பதில் சில நியாயங்களும் உண்டு. ஏனென்றால் தமிழகத்தில் பாஜக எடுத்த ரகசிய சர்வேயில் இளம் தலைவர்கள் வரிசையில் அண்ணாமலை, சீமான் மற்றும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் போன்றோர் இளைய தலைமுறையினர் இடையே பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக தேசிய கட்சி, பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பின் மீது காட்டும் அக்கறை மற்றும் அண்ணாமலையின் சாதுர்ய, அதிரடி அரசியல் ஆகியவற்றின் காரணமாக தமிழக இளம் வாக்காளர்களிடம் புதிய சிந்தனைகள் விதைக்கப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அந்த வரிசையில் நாமும் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி கார்த்தி சிதம்பரத்திடம் எழுந்து இருக்கலாம். அதனால்தான், தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வர விரும்புகிறேன் என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

அதேநேரம் அண்ணாமலைக்கு இளைஞர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடிகர் விஜய்க்கும் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் வைகோ போல பேச்சாற்றல் திறன் மிக்க சீமான் பல நேரங்களில் பேசுவது கேலிப் பொருளாகவும், சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறிவிடுகிறது. அது அவருக்கு உள்ள மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

மேலும் கடந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுக கூட்டணியையும்
அதிமுக- பாஜக கூட்டணியையும் விரும்பாதவர்கள் மூன்றாவது வாய்ப்பாக சீமான் கட்சிக்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதுதான் உண்மை. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்த 5 சதவீத சிறுபான்மையினரின் ஒரு பகுதியினர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர். அதனால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவருடைய கட்சிக்கு கிடைத்த நான்கு சதவீத வாக்குகள் 2021 தேர்தலில் 6.67 சதவீதமாக உயர்ந்தது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டதால் அந்த வாக்குகள் இனி நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல பாஜகவை மட்டுமே விரும்பாத நடுநிலை வாக்காளர்கள் அதிமுகவுக்கு, ஓட்டு போடாமல் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் திமுகவுக்கு வாக்களிக்கும் நிலையும் ஏற்பட்டது. இனி இந்த ஓட்டுகளும் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் அதிமுகவின் வாக்கு பலம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அதேநேரம் அரசியலுக்கே வராத நடிகர் விஜய்யை இந்த சர்வேயில் ஏன் சேர்த்துக் கொண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை. அவருடைய அரசியல் பிரவேசத்தை திமுக ஒருபோதும் விரும்பாது. அப்படி விஜய் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் கட்சியாக திமுகதான் இருக்கும்.

ஏனென்றால் கடந்த பல தேர்தல்களாக சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் பெரும்பான்மை வாக்குகளை தக்க வைத்து வரும் திமுகவுக்கு அதில்
பெரிய சரிவு ஏற்படும் என்பது நிச்சயம். இதனால்தான் விஜய் அரசியலுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பயந்து போய் அவருடைய புதிய திரைப்படங்களுக்கு பல வழிகளிலும் திமுக அரசு மறைமுகமாக முட்டுக்கட்டை போடுகிறது. அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களும் நடிகர் விஜய்யை கடுமையாக தாக்கி பேசுவதை பார்க்க முடிகிறது.

இதையும் மீறி விஜய் தனிக்கட்சி தொடங்கி துணிச்சலுடன் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விதான். அதே போல் எம்ஜிஆரை போன்ற துணிவு விஜய்க்கு வருமா? என்பதும் சந்தேகம்தான்.

எனவே நாம் தமிழர் சீமானையும், நடிகர் விஜய்யையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோடு ஒப்பிட்டு இந்த இருவரையும் எதிர்கால இளம் தலைவர்கள் என்று கூறுவதெல்லாம் கற்பனைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். இன்றைய நிலையில் அண்ணாமலை மட்டுமே தமிழக இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அதையும் கூட எந்த அளவுக்கு அவர் உருவாக்கி இருக்கிறார் என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வெளியான பின்பே உறுதியாக கூற முடியும்.

ஒருவேளை தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி உருவானால் எதிர்கால தலைவர்கள் வரிசையில் அண்ணாமலை பெயருடன் கார்த்தி சிதம்பரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அண்ணாமலை அளவிற்கு கார்த்தி சிதம்பரம் அதிரடியாக பேசக் கூடியவர் இல்லை என்றாலும் கூட அவருடைய எதார்த்தமான பேச்சு காங்கிரஸையும் தாண்டி மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் விதமாக உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தமிழகத்தில் தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்கப்போவதில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 327

    0

    0