உக்ரைனில் வந்தவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்பை தொடர முடியுமா…? சட்டம் மட்டும் சாத்தியமாக்குமா..? பாமகவால் அதிர்ச்சியில் திமுக…!
Author: Babu Lakshmanan9 March 2022, 6:08 pm
ஆளுநர் நிராகரிப்பு
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் கடந்தமாதம் 8-ம்தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அதை ஆளுநர் ரவிக்கு அனுப்பி ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா? இதுவரை என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி, இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்தை ஆய்வு செய்த ஆளுநர் ரவி அது கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலினும், திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக அதிர்ச்சி
திமுக அரசு இயற்றிய சட்டம் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை அமையும் வகையில் இருந்தது. ஏனென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும் என்று கடந்த ஆண்டு தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி என்று அத்தனை தலைவர்களும் நீட் தேர்வு ரத்து என்ற பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்தனர்.
திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் தேர்தலின்போது இந்த வாக்குறுதியை அளித்தனர். அதனால் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் முதல் சட்ட மசோதாவை
ஆளுநர் ரவி நிராகரித்தது, திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்ததில் வியப்பில்லை.
2வது முறை தீர்மானம்
இதையடுத்து தமிழக அரசு பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை எந்தத் திருத்தமும் இன்றி நிறைவேற்றி ஆளுனருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது.
ஒரு சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லை. அதை அவர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியே ஆகவேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.
பாமக அட்வைஸ்
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஆளுநர் ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.
அந்த அறிக்கையில்”சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், கால சூழலை புரிந்து ஆளுநர் செயல்பட வேண்டும்.
2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை எந்த நேரமும் அறிவிக்கப்படாலாம். அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுனர் அவரது பாதுகாப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
மற்றொருபுறம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு ஆளுனரின் ஒப்புதலை பெறும் விஷயத்தில் தமிழக அரசும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது கவலையளிக்கிறது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் இரண்டாவது முறையாகவும் ஆளுநர் தாமதிக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுனரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.
தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்காவிட்டால், ஆளுனரை முதலமைச்சர் நேரில் சந்தித்து, இதற்காக வலியுறுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பி அனுப்ப முடியாது
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது.
விரைவில் அவர் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பு நடவடிக்கை எடுப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசு மீது அதிருப்தி
இதுகுறித்து பிரபல கல்வியாளர்களும், அரசியல் நோக்கர்களும் கூறும்போது,
“முதல் முறை நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை ஆளுநர் பிப்ரவரி 1-ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அடுத்த ஒரு வாரத்துக்குள் 2-வது சட்ட மசோதாவை அதிரடியாக நிறைவேற்றி திமுக அரசு அவருக்கு அனுப்பி வைத்துவிட்டது. அதன் பிறகு மூன்று வாரங்கள் கடந்தும் கூட இந்த விஷயத்தில் ஆளுநர் ரவிக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை. இப்போது அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அதை தமிழக மாணவர்கள் எழுதியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதனால்தான் தமிழகஅரசின் செயல்பாடு இதில் திருப்திகரமாக இல்லை என்று டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக சாடி இருக்கிறார்.
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து சென்ற 2 ஆயிரம் மாணவர்களும் அடங்குவர்.
இந்த போர் காரணமாக அவர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. சில மாணவர்கள் இரண்டாண்டுகள், சில மாணவர்கள் மூன்றாண்டுகள், நான்காண்டுகளும் மருத்துவக் கல்வியை படித்து முடித்திருக்கின்றனர்.
உக்ரைனில் மருத்துவக் கல்வி பயில ஆண்டு ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதர ஐரோப்பிய நாடுகளில் படிக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் தேவைப்படும். குறைந்த கல்வி கட்டணம் என்பதால் உக்ரைனை தேர்வு செய்த மாணவர்களுக்கு இது தற்போது மிகப் பெரும் சுமையாக அமையும்.
ஏனென்றால் இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவ பல்கலைக் கழகங்களிலோ மருத்துவக் கல்வி படிக்க வேண்டுமானால் 6 ஆண்டுகளுக்கு குறைந்தது 50 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும்.
வாய்ப்பு கொடுக்கவும்
எனவே அந்தந்த மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் நிகர் நிலை மருத்துவ பல்கலைகழகங்களில் எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்களை அதிகரித்து உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு வாயிலாக மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனென்றால் 2019-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு எம்பிபிஎஸ் படிக்க செல்லும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் நிபந்தனை விதித்துள்ளது.
எனவே அவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்வது என்பது இயலாத காரியமாக இருக்கும். அதையும் மீறி சேர்த்துக்கொண்டால் பல்வேறு சட்ட சிக்கல்கள் உருவாகும். குறிப்பாக நாடு முழுவதும் நீட் தேர்வு இல்லாத நிலையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கலாம்.
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். சிலர் மட்டுமே வங்கிகளில் கல்விக் கடன் பெற்று இருக்க வாய்ப்பு உள்ளது. இது போன்றவர்களின் வங்கிக் கடனை மனிதாபிமான முறையில் ரத்து செய்துவிட்டு அவர்கள் இங்கே தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு மாநில அரசுகள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உக்ரைன்-ரஷ்யா இடையே எந்த நேரமும் போர் மூளலாம் என்ற நிலையை உணர்ந்த மத்திய அரசு போர் தொடங்குவதற்கு நான்கைந்து வாரங்களுக்கு முன்பே உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியது. ஆனாலும் பெரும்பாலான இந்திய மாணவர்கள் வெளியேறவில்லை. அதனால் போர் தொடங்கிய பின்பு இவர்களின் உயிரை காப்பாற்றுவதுதான் மோடி அரசின் முதல் நோக்கமாக இருந்தது.
இப்போது கிட்டத்தட்ட 95 சதவீத இந்திய மாணவர்களை மத்திய அரசு உக்ரைனில் இருந்து மீட்டு விட்டது. எஞ்சியவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”என அந்த கல்வியாளர்களும், அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர்.