உக்ரைனால் தமிழகத்தில் மீண்டும் வெடித்த நீட் சர்ச்சை..! இந்திய மாணவர்களுக்கு உதவுமா…?

Author: Babu Lakshmanan
4 March 2022, 6:52 pm

‘ஆபரேஷன் கங்கா’

தனது பக்கத்து நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் ஹங்கேரி,ருமேனியா, போலந்து, சுலோவாக்கியா மால்டோவா நாடுகளின் எல்லைகளின் வழியாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

‘ஆபரேஷன் கங்கா’ என்னும் அதிவேக திட்டத்தின் கீழ் மத்திய அரசு வர்த்தக மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சுமார் 21 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருப்பது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிப்பவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2,200 பேரும் இதில் அடங்குவர். இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைன் நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 3000 இந்தியர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் நீட் தேர்வு சர்ச்சை

இந்த நிலையில்தான் மருத்துவம் படிக்க வெளிநாடு சென்ற மாணவர்கள் காரணமாக நீட் தேர்வு சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக, கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்
“நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலம் மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திமுகவும் தமிழக அரசும் தொடர்ந்து போராடி வருகிற நிலையில் தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்க போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல. அந்த நாட்டில் உள்ள மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதும் உள்நாட்டில் மருத்துவ கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமையவேண்டும். இந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்” என்று கூறியிருந்தார்.

இதேபோல கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆகியோரும் இதே கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர்.

திறமைக்கு அளவுகோல் நீட் அல்ல

தற்போது திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகமும் இந்த கோரிக்கையை எழுப்பி உள்ளது. இதுபற்றி அதன் தலைவர் கி வீரமணி,” மருத்துவ படிப்பு படிக்க இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிகம் செல்ல காரணம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்.

Veeramani Condemned - Updatenews360

நீட் தேர்வை ஒழித்து அதிக மருத்துவக் கல்லூரிகளை இந்தியாவில் உருவாக்கினால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தகுதி, திறமைக்கு அளவுகோல் நீட் அல்ல” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இதுபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று பேசுகிறார்கள் என்பது பாஜக தலைவர்களின் வாதமாக உள்ளது.

திமுக மீது பாஜக குற்றச்சாட்டு

தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, “நீட் தேர்வினால்தான் மருத்துவ படிப்புக்காக நமது மாணவர்கள் உக்ரைன் செல்கிறார்கள் என்று புதிதாக ஒரு பூதத்தை கிளப்பி விடுகிறார்கள்.

கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் நீட் எதிர்ப்பாளர்கள் உக்ரைனில் படிக்க வேண்டுமானாலும் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் கருத்துகளை சொல்வது அவர்களின் அறியாமையை, அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 50 சதவீத மாணவர்களிடம் ஆண்டுக்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஏன் உத்தரவு போடவில்லை?… தமிழக அரசின் தனியார் கல்லூரிகளுக்கான ஆதரவு நிலைப்பாட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளன. உண்மை நிலை இவ்வாறு இருக்க நீட் தேர்வால்தான் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிறார்கள் என்ற உண்மைக்கு புறம்பான கருத்தை விதைக்கிறார்கள்.

தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும்”என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவுக

இது குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் அதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கிடைக்கும் வாய்ப்பு மிகமிகக் குறைந்து போகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை இருந்தால் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளில் 99 சதவீதம் சேர்வார்கள். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுக்க வேண்டிய கட்டாயத்தையும் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் சந்திக்க நேரிடும். இதை கருத்தில் கொண்டுதான் முந்தைய அதிமுக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.

தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்று இருந்ததாலேபோதும் என்ற தகுதியின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில், மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் செல்கிறார்கள். இது 2019-ம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளது.

doctors cover - updatenews360

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடிக்கும்போது அவர்களுக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை செலவாகிறது. இதனால்தான் உக்ரைன் நாட்டில் மட்டுமின்றி ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா, எஸ்டோனியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க செல்கிறார்கள்.

இந்திய மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படிக்க மொத்தம் 88 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதனால்தான் வெளிநாட்டு மாணவர்கள் மருத்துவத்தை அதிகம் விரும்பிப் படிக்காத நாடுகளை தேர்வு செய்து, எப்படியும் டாக்டராகி விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ள இந்திய மாணவர்கள் அந்த நாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிக்கிறார்கள் என்பதும் உண்மை. எனவே நமது நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக நிறுவிட வேண்டும். இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்கள் மறைமுகமாக நன்கொடையாக பெறும் தொகை கணிசமாக குறைவதற்கும் வாய்ப்புண்டு.

வெளிநாட்டில் பயின்றவர்களுக்கு சிக்கல்?

தவிர ஒரு நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்கவேண்டும் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலை நிறைவேற்ற வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.

அதேநேரம் இன்னொரு உண்மையையும் சொல்ல வேண்டும். தீவிர போர் நடக்கும் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்டு வரப்படும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இவர்கள் போர் முடிந்து அமைதி ஏற்பட்ட பிறகு உக்ரைன் நாட்டுக்கு மீண்டும் படிக்க செல்வார்களா? என்பது சந்தேகம்தான்.

அவர்களுக்கு இங்கேயே மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்கிற வாதம் வலுப்பெறலாம். இப்படியொரு சிக்கல் எழுந்தால் தமிழக அரசுக்கு இக்கட்டான நிலைமை உருவாகும். அதனால்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை தற்போது தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனவோ என்றும் கருதத் தோன்றுகிறது” என அந்த கல்வியாளர்கள் குறிப்பிட்டனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!