திமுக ஆட்சியில் 4 வழிச்சாலை பணிகளில் சுணக்கம்… பணி செய்ய விடாமல் ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடி : மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 4:19 pm

கன்னியாகுமரி : தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நான்கு வழிச்சாலை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணைய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் வந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான்கு வழி சாலை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போதுமான மண் மற்றும் கல் போன்றவை கிடைக்காததாலும், போதுமான ஒத்துழைப்பு கிடைக்காததாலும், இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் தொடர்கிறது.

குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர மேற்கொள்ள முடியாத அளவிற்கு வெளிப்படையாக சொல்ல முடியாத சில நெருக்கடிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக தமிழக முதல்வர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை பாரதம் ஒன்றுபட்ட பாரதமாகவே இருக்கிறது. அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க போதுமான இடத்தை தமிழக அரசு ஒதுக்கினால், அது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.

ஏற்கனவே இந்தியா முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதில் 65 விமான நிலைய பணிகள் நடந்து வருகிறது. எனவே இதற்கு போதுமான ஒத்துழைப்பு மற்றும் இட வசதி கிடைத்தால் நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுக்குள் 100 விமான நிலையங்களும் இந்தியாவில் அமையும், என்று கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்ஆர் காந்தி, மாவட்டத் தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை தலைவர் தேவ், முன்னாள் நகர் மன்ற தலைவி மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 977

    0

    0