‘ஏழைகளுக்கு இப்படியா வீடு கட்டி கொடுப்பீங்க… வேற ஆட்களே கிடைக்காது-னு நினைப்பா..?’ ; திமுக ஒப்பந்ததாரரை வெளுத்து வாங்கிய ஆட்சியர்!!
Author: Babu Lakshmanan4 January 2023, 10:59 am
காஞ்சிபுரம் ; ஏழைகளுக்கு அரசு தரப்பில் கட்டிக் கொடுக்கும் வீடுகள் தரமற்ற முறையில் கட்டியதாக திமுக ஒப்பந்ததாரரை மாவட்ட ஆட்சியர் சகட்டுமேனிக்கு திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. நிரந்தர வீடுகள் இல்லாமல், நீராதார பகுதிகளில் குடிசை வீடுகள் அமைத்து வசிக்கின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும், இவர்களின் குடிசைகளை சுற்றி தண்ணீர் தேங்குவதால், மிகவும் சிரமப்படுகின்றனர்; குறிப்பாக குழந்தைகள், முதியோர் அதிகளவில் அவதிப்படுகின்றனர். இதனால் அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு ஊராட்சியில் தலா 269 சதுர அடி பரப்பளவில், கட்டுமானம், மின் இணைப்பு, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தளம் அமைக்கப்பட்ட 76 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஏற்கெனவே சட்டசபையில் தெரிவித்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் முடிவில் வீடுகள் கட்டப்பட்டு பழங்குடி மக்களிடம் ஒப்படைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. டிசம்பர் மாதம் முடிந்து இரண்டு தினங்கள் ஆன நிலையில் காலதாமதம் ஏற்பட்டதால் இப்பணிகளை இன்று தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப் போவதாக கூறப்பட்டது.
இதனையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஊத்துக்காடுக்கு வந்து வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய வந்தார். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் முறையான பதில் அளிக்காததால், ஆவேசமுற்ற திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி அலுவலர்களை பார்த்து உங்களை கொன்னே போடுவேன், நான் யார் என்று தெரிகிறதா..?, என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிகவும் ஆவேசமாக திட்டினார். அதனால், வட்ட வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் அனைவரும் நடுநடுங்கி போனார்.
இந்நிலையில் அமைச்சர்கள் வருவதற்கு முன்பே இந்த இடத்தினை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அவர்கள், வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியற்றார். திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்ததார் அவளூர் பாபுவை பார்த்து 4.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏழைகளுக்கு அளிக்க கூடிய வீடுகளை இப்படியா கட்டுவீர்கள்..?
உங்களை லஞ்ச ஊழல் துறையிடம் பிடித்து கொடுத்து விடுவேன், நீங்கள் இல்லாமல் இருந்தால் வேற ஆட்களே கிடைக்காது என நினைக்கின்றீர்களா..? என மிகவும் ஆவேசமாக திட்டினார் . மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாரும் வந்து பார்க்க மாட்டீர்களா? நான் தினந்தோறும் வந்து இந்த வீடுகளை பார்க்க வேண்டுமா? நீங்கள் ஏன் பார்க்கவில்லை என்ற ரீதியிலும் ஆவேசமாக திட்டியதால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைவரும் திகைத்து நின்றனர்.
எப்படி இருப்பினும், திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டு வருகின்ற அனைத்து வீடுகளும் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், இதில் திமுக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் வீடுக்கட்டும் திட்டத்தில் பணம் பங்கு போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடி மக்களுக்கு 443 வீடுகளை திமுகவினர் கட்டவுள்ளனர். இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. ஊத்துக்காடு ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவர் மணிகண்டன் ஏகப்பட்ட முறைகேடுகளை இந்த பகுதியில் செய்துள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகிய இரண்டு மாவட்ட பெண் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு, ஒப்பந்தாரர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.