தரமற்ற சாலைகளைப் போட்டு ஊழலில் கொழிக்கும் திமுக அரசு : வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அண்ணாமலை வைத்த குட்டு!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 11:08 am

தரமற்ற சாலைகளைப் போட்டு ஊழலில் திளைக்கும் திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சாலை அமைப்பது, சாக்கடை கால்வாய் அமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் பைக் மற்றும் ஜீப்போடு போடப்பட்ட சிமெண்ட் சாலை, கரூரில் சாக்கடை கால்வாயில் கழிவுநீரில் கான்கிரீட் கலவையை கொட்டியது, தஞ்சையில் நடுசாலையில் மின்கம்பத்தோடு சாலையை போட்டது போன்ற அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

இந்த செயல்பாடுகள் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் கிராம மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் தரமற்ற சாலைகள் போடப்பட்டிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் குட்டூர் கிராம மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, 20 ஆண்டுகளுக்குப் பிறகு போடப்பட்ட சாலை தரமற்று இருப்பது, அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, திமுக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.

35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2269 கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளது.

தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, இதுபோன்ற சாலைகளை தரமற்ற முறையில் அமைத்தால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பணவிரயம் தான் ஏற்படுவதாகவும், எனவே, ஒருமுறை போடப்படும் சாலைகளை, தரமுடன் அமைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 552

    0

    0