கூட்டணி முறிவால் அப்செட்டில் மேலிடம்… அவசர அவசரமாக நாளை டெல்லி பறக்கும் அண்ணாமலை!!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 2:33 pm
கூட்டணி முறிவால் அப்செட்டில் மேலிடம்… அவசர அவசரமாக நாளை டெல்லி பறக்கும் அண்ணாமலை!!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக சமீபத்தில்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தேஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக சார்பாக அறிக்கை வெளியிட்டது. அதில் தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவின் இந்த முடிவு குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்றும், சரியான நேரத்தில் இது குறித்து பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுக – பாஜக முறிவுக்கு பின் முதல்முறையாக அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். கூட்டணியை முறித்துக் கொண்ட பின் டெல்லி பாஜக அண்ணாமலையை டெல்லி வர அழைத்திருந்தது.
இந்த நிலையில் கோவை, விமான நிலையத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் அவர் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்.