நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தவறாகி போன கணிப்பு… படுதோல்வியால் ஏற்பட்ட விரக்தி… கமல், சீமான் எடுத்த புது முடிவு…!!
Author: Babu Lakshmanan24 February 2022, 5:35 pm
படுதோல்வி
அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த கட்சிகளின் பட்டியலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யமும் , சீமானின் நாம் தமிழர் கட்சியும் இடம் பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளுமே தலா 7-க்கும் குறைவான பேரூராட்சி வார்டுகளில் மட்டுமே வென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
கமலும், சீமானும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவை முழுக்க முழுக்க கிராமப்பகுதிகளில் நடந்த தேர்தல் என்பதால் அவற்றின் முடிவுகள் இருவரிடமும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
என்றபோதிலும் மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது, மாநகராட்சிகளை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் கூட கணிசமான அளவிற்கு கவுன்சிலர் பதவிகளை வென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தனர்.
தவறிய கணிப்பு
அதற்கு முக்கிய காரணம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி
16 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்ததுதான். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி 29 லட்சம் ஓட்டுகளை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், தான் சந்தித்த முதல் தேர்தலான 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 15 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகளும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளும் வாங்கியிருந்தது.
இவற்றில் பெரும்பாலான ஓட்டுகள் நகர்ப்பகுதிகளில் கிடைத்ததாகும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருமே களமிறங்கினாலும் கூட வெற்றியை ருசிக்க முடியவில்லை. கமல் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசனிடம் 1800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். சென்னை திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் 49 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி தோல்வி அடைந்தார்.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் 489 பேரூராட்சிகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டுகளில் குறைந்தபட்சம் 200 இடங்களை கைப்பற்றி விடலாம் என்று இருவரும் மனக்கோட்டை கட்டி தமிழகத்தின் பல நகரங்களுக்கு சென்று தீவிர தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டனர்.
கமல் அட்வைஸ்
ஆனால் அவர்கள் போட்ட கணக்கு அடியோடு தவிடுபொடியாகிப் போனது. அதனால் உண்டான வேதனையை கமல் உடனடியாக வெளியிட்ட அறிக்கையில் கொட்டித் தீர்த்தார். அதில் மிக முக்கியமான பல விஷயங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்ய
வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றி பெறச் செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்கு சேவையாற்றுங்கள்.
எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில் வாய்ப்பாக கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என 4 ஆண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று கமல் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் தொடர் தேர்தல் தோல்வியால் தனது கட்சியை கலைத்துவிட்டு அரசியலுக்கு விரைவில் கமல் முழுக்கு போடுவார் என்று சில கட்சிகளின் தலைவர்கள் கிளப்பிவிட்ட புரளிக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளியும் அவர் வைத்துள்ளார்.
நேர்மைக்கு கிடைத்த வெற்றி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகராட்சி தேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்த படுதோல்வி பற்றி இதுவரை பெரிதாக எதுவும் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.
அதேநேரம் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பேரூராட்சி வார்டு தேர்தலில் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ட்விட்டர் பதிவுகள் மூலம் தங்களது மகிழ்ச்சியை, ‛மேல ஏறி வாரோம்… நேர்மைக்கு கிடைத்த வெற்றி… நாம ஜெயிச்சிட்டோம் … புலிக்கு என்றைக்கும் தோல்வி இல்லடா…”என்று வெளிப்படுத்தியுள்ளனர்.
கமலுடன் கைகோர்த்திருக்கனும்
கமல், சீமான் கட்சிகளுக்கு நகர்ப்புற தேர்தலில் கிடைத்த தோல்வி, குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திலும் மாநிலம் முழுவதும் தனித்தனியாகத்தான் களம் கண்டன. இருவருடைய பிரச்சார கூட்டங்களுக்கும் நூற்றுக் கணக்கில் மக்களும் திரண்டனர்.
அவர்களது கட்சித் தொண்டர்களும் தீவிர களப்பணி ஆற்றினர். சமூக ஊடகங்களிலும் தூள் கிளப்பினர். பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள் எதுவும் வழங்காமல் நேர்மையான முறையில் வாக்கும் சேகரித்தனர். ஆனாலும் தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளுக்கும் பலத்த அதிர்ச்சி தருவதாகத்தான் அமைந்தது. அதேநேரம் இந்த முடிவைக் கண்டு பயந்து விடாமல் இருவரும் அரசியலுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று வெளிவரும் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.
பொதுவாகவே ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இரண்டிலுமே ஆளும் கட்சிக்குத்தான் வாக்காளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். இதில் இரண்டாவது, மூன்றாவது சிந்தனை என்பதெல்லாம் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் மீதுதான் இருக்கும். ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்தால் நமது பகுதியில் வளர்ச்சி எதுவும் ஏற்படாமல் போய் விடுமோ என்ற பய உணர்வுதான் இதற்கு முதல் காரணம். இதுதவிர அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் செய்யும் பணப்பட்டுவாடாவும் பரிசுப் பொருட்களும் வார்டு தேர்தல் முடிவை தீர்மானிப்பதாக அமையும்.
தேர்தல் என்று வரும்போது அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை எல்லாம் மறந்துவிட்டு கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள். அதில் அதிக கட்சிகள் அடங்கிய செல்வாக்கு கொண்ட கூட்டணிதான் வெற்றி பெறும் என்பதும் தெரிந்த விஷயம். அதனால் தங்களுக்குள் என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் கூட அதையெல்லாம் மறந்துவிட்டு கமலும், சீமானும் கூட்டணி அமைத்து இந்த நகராட்சி தேர்தலை சந்தித்திருக்கவேண்டும்.
அப்படி செய்திருந்தால் 2019 நாடாளுமன்ற 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிக ஓட்டுகள் வாங்கி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது போல இப்போதும் ஒரு சலசலப்பை இருவரும் ஏற்படுத்தியிருக்க முடியும். அது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கூட வழி வகுத்து இருக்கும்.
ஆனால் அது போன்றதொரு நிகழ்வு நடக்காமல் போனது துரதிர்ஷ்டம்தான். எப்போதும் தேர்தல் வெற்றியில் கூட்டணி கட்சிகளும் முக்கிய பங்கு வகிக்கும். அதனால்தான் 13 கட்சிகளைக் கொண்ட திமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற பாமக, தேமுதிக போன்ற கட்சிகளால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை.
ஆனால் அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவருடைய கடின உழைப்பால் பாஜக தனித்து நின்ற போதிலும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
2017 ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மிகக் குறைவான ஓட்டுகள் பெற்று டெபாசிட் தொகையையும் இழந்தார். ஆனால் அதே திமுக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. அதற்கு காரணம் வலுவான கூட்டணிதான். எனவே இனிவரும் தேர்தல்களிலாவது மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது வெற்றி பெற முடியும்” என்று இருவருக்கும் அந்த அரசியல் விமர்சகர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர்.