ஓட்டுக்கு ரூபாய் நோட்டு… சீட்டு கம்பெனியாக மாறிய அரசியல் கட்சிகள்… வாக்காளர்களுக்கு கமல், சீமான் ‘அட்வைஸ்’!

Author: Babu Lakshmanan
16 February 2022, 4:29 pm

கவர்ச்சி பரிசு பொருட்கள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,
490 பேரூராட்சிகளில் 12,800 பதவிகளுக்கு வருகிற 19-ம் தேதி மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடக்க இருக்கிறது.

தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் பிரபல அரசியல் கட்சிகள், பண வசதி படைத்த சுயேச்சை வேட்பாளர்கள் வாக்காளர்களை மிக சிறப்பாக உபசரிப்பதில் தற்போது இறங்கியுள்ளனர்.

லேப்டாப், விலை உயர்ந்த ஸ்மார்ட் போன், பெண்களுக்கு கவர்ச்சியான சேலைகள், ஹாட் பாக்ஸ், மிக்ஸி என வீட்டு உபயோக சாதனங்கள், ஆண் வாக்காளர்களுக்கு வேட்டி, துண்டு, செருப்பு, குவாரட்டர், கோழி பிரியாணி என்று பல பரிசுகள் இரவில் ரகசியமாக பரிமாறப்படுவதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

அதை உண்மை என்று சொல்வது போல தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை தங்களது அதிரடி வேட்டையின் மூலம் கைப்பற்றியும் இருக்கிறார்கள்.

ஆரத்தி எடுத்தால் பணம்

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை,நெல்லை, கரூர் மாவட்டங்களில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே புகுந்து விளையாடுவதும் தெரிய வந்துள்ளது.

வேட்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஆரத்தி எடுக்கும் பெண்கள், மாடியிலிருந்து பூக்கள் தூவி வரவேற்கும் சிறுமிகள், இளம் பெண்களுக்கு கைமேல் 200 ரூபாய், 500 ரூபாய் என்று கிடைத்து விடுவதாகவும் பரபரப்பு பேச்சு இருக்கிறது.

இதுதவிர அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார கூட்டங்களுக்கு அழைத்து வரப்படுபவர்களும் உற்சாகம் பெறும் விதமாக மிகச் சிறந்த முறையில் கவனிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டுக்காக இப்படி அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் பணத்தை வாரி இறைப்பது கண்டு சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யமும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இருவரும் கொந்தளித்துப் போய் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதை தங்களது பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள் பேசத் தவறியதும் கிடையாது.

சீமான் காட்டம்

வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த சீமானின் பேச்சில் கடும் கோபமும் வெளிப்பட்டது.

அவர் பேசுகையில், “உழைக்கிறவன் கையேந்துகிறான். உழைக்காதவன் கொடுக்கிறான். இதுதான் சுரண்டல். இதைத் தடுக்கணுமா…இல்லையா?… உன் உழைப்பைச் சுரண்டி, அவன் கொழுத்து பெருத்து நிற்கிறான் என்பதை எப்போது புரிந்துகொள்கிறாயோ, அன்றுதான் நீ புரட்சிக்கு, கிளர்ச்சிக்குத் தயாராவாய்.

நீட் வேண்டாம் என்பதுதான் திமுக., அதிமுகவின் முடிவாகவும் இருக்கிறது. ஆனால், ‘நீட் தேர்வு வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசுகிறார். ‘தமிழக அரசு, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கொண்டு போனால்… நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதைத் தகர்ப்பேன்’ என்கிறார், சிதம்பரம் மனைவி நளினி.

ஆனால், இரண்டு கட்சியும் கூட்டணி. இது எந்த மாதிரி கூட்டணி… உங்களால் மானங்கெட்டு, வெட்கங்கெட்டு மக்களை எப்படிச் சந்திக்க முடிகிறது? மக்களுக்கும் நீட் பற்றிய கவலையில்லை. ‘நீட்டை விடுப்பா. 500 ரூபாய் நோட்டை நீட்டுப்பா’ என்கிறார்கள், மக்கள்.

திமுக எண்ணம்

மதிப்புமிக்க நம் உரிமைகளைச் சில ரொட்டித் துண்டுகளுக்காக விற்பனை செய்வது அவமானகரமானது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஓட்டுக்குக் காசு கொடுக்கிறவன் பாவி. அந்தக் காசை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறவன் தேசத் துரோகி. இதைச் சொன்னது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

‘தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா!?’ இது, பேரறிஞர் அண்ணா சொன்னது. நாம் தொடர்ச்சியாகத் தவிட்டுக்கு ஓட்டை விற்கிறோம். அண்ணா பெயரைச் சொல்லி அரசியல் செய்கிறவர்களே தவிட்டுக்கு ஓட்டை வாங்குகிறார்கள். மக்களாட்சியின் வலிமைமிக்க ஆயுதம் வாக்கு. அதை விற்பதால், உங்கள் உரிமையை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதை என்றைக்கு உணர்கிறீர்களோ… அப்போதுதான் நீங்கள் மேம்படுவீர்கள்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எந்தக் காலத்திலும் பிஜேபிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். ‘நம்மை விட்டால் அவர்களுக்கு ஆளில்லை’ என்று திமுக நினைக்கிறது. இத்தனை ஆண்டுகால ஆட்சியில், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கு திமுக செய்த ஒரேயொரு நன்மையை மட்டும் சொல்லுங்கள். ஒன்றுதான் கேட்கிறேன்” என்று சீமான் கொட்டித் தீர்த்தார்.

கமல் கோபம்

மதுரையில் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகர் கமலின் ஆவேசம் சீமானை விட இன்னும் ஒருபடி மேலே இருந்தது.

அவர் பேசும்போது, “ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்காக உங்கள் முன்பு மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பணம் கொடுத்து வாங்குகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் அனைத்து இடங்களிலும் கழிவுநீரை இலவசமாக ஓட விட்டிருக்கிறார்கள். சாக்கடையை சரி செய்ய முடியாதா?… இந்தக் கேள்வியை கூட மக்கள் இதுவரை கேட்காமல் இருந்திருக்கிறீர்கள். அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த வந்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம்.

ஆட்சி செய்தவர்கள் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். அரசியலை வியாபாரமாக செய்கிறார்கள்.

மக்களும் நல்லவர்களை தூக்கிப் பிடிக்க முன்வரவேண்டும் இல்லாவிட்டால் எல்லா விஷயத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். கொள்ளை அடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை மக்கள் பதவியில் அமர்த்தியதன் காரணமாகத்தான் தமிழகம் இப்படி சீரழிந்துள்ளது. மாற்றத்திற்கான ஏற்பாடுகளை மக்களே செய்யவேண்டும் அது மக்கள் கையில்தான் உள்ளது.

ஜனநாயகத்தை மக்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கான பலமான ஒரு ஆயுதம்தான் ஓட்டு. அதை பண்டமாற்று வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டாம் கட்சியினர் கொடுக்கும் 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என்று எதுவாக இருந்தாலும் பத்தாது.

ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கவுன்சிலராக வருகிறவர், பதவிக்கு வந்த பின்பு ஒரு கோடி ரூபாயை எடுக்காமல் விடுவாரா?… அதனால் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்களுக்கு ஓட்டுப் போட விட்டாலும் கூட பரவாயில்லை. பணம் கொடுப்பவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். மக்கள் பணம் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அது திருடர்கள் கையில் கொட்டி கிடைக்கிறது. இந்தக் காட்சிகள் எல்லாம் மாறவேண்டும்” என்று குமுறினார்.

தூய்மையான அரசு நிர்வாகம்

கமல், சீமான் இருவருடைய இந்த ஆவேச பேச்சு குறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “கடந்த அக்டோபர் மாதம் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் கிடைத்த பெரும் தோல்வி இருவரையும் இப்படி பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் பணம் வாங்காமல் வாக்களித்து உங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டுங்கள் என்று வாக்காளர்களிடையே பெரிதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்கள். தற்போது பாஜக தனித்துப் போட்டியிடுவதால் அவர்களும் மக்களிடையே பெரிய அளவில் சிந்தனையை, மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

DMK Forgery Vote -Updatenews360

இதனால் நிச்சயம் முதல் முறை மற்றும் இளைய தலைமுறை வாக்காளர்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடவேண்டும் என்கிற மன நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது நிச்சயம். அப்படியே பணம் வாங்கி விட்டாலும் கூட பணம் கொடுத்த வேட்பாளருக்கோ, கட்சிக்கோ ஓட்டு போடக்கூடாது என்ற சிந்தனையும்தான் அவர்களது மனதில் எழும். தவிர தங்கள் வீடுகளில் பெற்றோரிடமும் இதனை விளக்கிக் கூறி விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்துவார்கள். இது எதிர்காலத்தில் தூய்மையான அரசு நிர்வாகம் அமைய வழிகோலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1708

    0

    0