நகராட்சித் தேர்தலில் 3-வது இடம் யாருக்கு… ? வரிந்து கட்டும் கட்சிகள்.. அனல் பறக்கும் பிரச்சாரம்…!!
Author: Babu Lakshmanan7 February 2022, 7:40 pm
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது.
9 முனை போட்டி
அதன்படி சென்னை, கோவை மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
அது மட்டுமின்றி 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என 12,838 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் 22-ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி-அதிமுக இடையே நேரடி கடும் மோதல் காணப்படுகிறது. மேலும் பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் 9 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இத்தகைய கடினமான போட்டி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தீவிர பிரச்சாரம்
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் அதை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டும் இருக்கிறது.
எனினும் இதற்கு முன்பாகவே முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். இதனால் அடுத்த 10 நாட்களும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தத் தேர்தலில் சில வினோதங்களையும் பார்க்க முடிகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகியவை இடம் பெற்றிருந்தாலும் தாங்கள் எதிர்பார்த்த வார்டுகள் கிடைக்காத மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராகவே, இந்தக் கட்சிகள் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கி விட்டுள்ளன. திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் சுயேச்சையாகவும் மல்லுக் கட்டுகிறார்கள்.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, ஆகியவற்றின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முக்கிய பிரமுகர்கள் கடைசி நேரத்தில் மாற்று கட்சிகளுக்கு தாவியதையும் பார்க்க முடிந்தது. பல இடங்களில் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்பட்டு விட்டதாகவும், போட்டியிடவிடாமல் தடுக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேநேரம் பல வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டும் உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை விட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பல மடங்கு விறுவிறுப்பாக இருப்பதை காண முடிகிறது என்றும் இதில் பண பலம் மிக்கவர்களே வெற்றி பெறுவதற்கு மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு என்றும் தமிழக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நிறைவேற்றாத வாக்குறுதிகள்
“பொதுவாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல்தான் இருக்கும். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்களே ஆவதால் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சியினரிடம் அதிகமாக காணப்படுகிறது.
ஆனால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், மாதாந்திர மின் கட்டண கணக்கீடு, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, நீட் தேர்வு ரத்து ஆகிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, உள்ளூர் அரசு சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்ற ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
தவிர கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதே போல் 5 பவுன் நகை கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளால் தமிழகம் முழுவதும் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட 21 பொருட்களின் தரம் பற்றிய விமர்சனம், முந்தைய அதிமுக அரசு போல பரிசுப் பணம் எதுவும் வழங்கப்படாதது ஆகியவையும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் பிளஸ் 2 மாணவி லாவண்யாவின் தற்கொலையில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டாதது போன்றவை எதிர்க்கட்சிகளால் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.
3வது இடத்தில் பாஜக
குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்து, தினமும் திமுக அரசை கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பது இளைய தலைமுறை வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சி நம்புகிறது.
இதனால் திமுக அதிமுகவுக்கு அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு என்றும் நம்பப் படுகிறது.
தமிழகத்தில் இதுவரை பாஜக தலைவர்கள் யாரிடமும் இல்லாத பேச்சு சாதுர்யம், ஊடகங்களை அவர் கையாளும் விதம் ஆகியவை அண்ணாமலைக்கு சாதகமான அம்சங்களாக இருப்பதால் இதை எளிதில் ஒதுக்கிவிடவும் முடியாது.
அதனால் 3-வது இடத்துக்கான போட்டியில் பாஜக முன்னணியில் இருப்பது கண்கூடாகவே தெரிகிறது. வடமாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள பாமக, நகர்ப்புறங்களில் கணிசமான வாக்காளர்களை கொண்டுள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை 4, 5, 6-வது இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அமைப்பினர் சுயேச்சைகளாக போட்டியிடுவதால் அவர்கள் அரசியல் கட்சிகளுடனான கணக்கில் கொள்ளப்பட மாட்டார்கள். டிடிவி தினகரனின் அமமுகவினர், இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறுவதும் கடினம். ஏனென்றால் அவருடைய கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை.
எப்படிப் பார்த்தாலும் கடந்த ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்ததுபோல திமுக கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத இடங்களில் வெற்றி பெறுமா? என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
0
0