கடலில் வீணாக கலக்கும் வைகை நீர்.. கண்மாய்களை தூர்வாரும் எண்ணம் இருக்கா? திமுக அரசுக்கு சீமான் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2023, 6:12 pm

கடலில் வீணாக கலக்கும் வைகை நீர்.. கண்மாய்களை தூவாரும் எண்ணம் இருக்கா? திமுக அரசுக்கு சீமான் கேள்வி!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, கொட்டக்குடியாறு, முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், வைகை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழிவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இருப்பினும் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மைக்குப் பயன்பட வேண்டிய நீர் முழுவதுமாக வீணாகிவிடுமோ என்று வேளாண் பெருங்குடி மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

வைகை நீரை எதிர்பார்த்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் 1.67 லட்சம் எக்டேர் நஞ்சை நிலங்கள் காத்து கிடக்கின்றன. 3 லட்சத்து 96 ஆயிரத்து 245 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கும் பெரிய கண்மாய்க்கு வந்து சேரும் வைகை பாசன நீர், 600 கன அடி, களரி கண்மாயில் தேக்கப்பட்டு, அங்கிருந்து 58 சிறிய கண்மாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் வைகை அணையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நீர் முழுவதும் பனைக்குளம் நதிப்பாலம் வழியாக ஆற்றங்கரை முகத்துவாரப் பகுதியில் கடலில் கலந்து வீணாகி வருவதால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர்.

பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வரும் வைகை தண்ணீரைக் கூடுதலாக சேமித்து வைக்கவும் கரையைப் பலப்படுத்தி பெரிய கண்மாய் வரும் பாதையை விரிவுபடுத்தவும் மற்றும் ஆற்றுப்பகுதிக்குள் வளர்ந்து நிற்கும் கருவேல செடிகள், நாணல் செடிகளை முழுமையாக அகற்றவும், ஊருணி, கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் செல்ல ஏதுவாக பாதைகளைத் தூர்வார தொடர்புடைய துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காததால் வைகை நதி நீர் முழுவதும் பாசனத்திற்குப் பயன்படாமல் கடலில் கலந்து வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு அரிதிற் கிடைத்த மழைநீரினை முழுவதுமாக கடலில் சேர்த்து வீணடிக்காமல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு பயன்படும்படி முறையாக சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 304

    0

    0