சட்டம், ஒழுங்கு கெட்டுப்போச்சு… திமுக அரசு மீது திடீர் கொந்தளிப்பு..! வைகோ கருத்தால் ஸ்டாலின் அதிர்ச்சி!!!
Author: Babu Lakshmanan29 August 2022, 5:07 pm
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுக அரசு மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் விட்டது என்பதுதான். குறிப்பாக அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, சிறுமிகள், மாணவிகள், இளம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை அமோகம் என்று எதிர்க்கட்சிகள் அடுக்கி கொண்டேபோகின்றன.
கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கூறும்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விநியோகம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சிதைந்துள்ளது. 2137 பேர் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறிவிட்டு 130 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திமுக ஆட்சியால் மாறியுள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய அதிமுக சட்டம் இயற்றினாலும், திமுக அரசு அதனை தடுக்க தவறிவிட்டது. குழுக்கள் அமைப்பதை மட்டுமே முதலமைச்சர் செய்கிறார். அந்த குழுக்கள் செயல்படுவதில்லை” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதை பதைக்கிறது.போதைக் கலாச்சாரத்தைப் போற்றி வளர்க்கிறது, திமுக அரசு” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதேபோல தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மவுனம்
முதலமைச்சர் ஸ்டாலினும், காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவும்
இது தொடர்பாக என்னதான் விளக்கம் அளித்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் மட்டும் அசைக்க முடியாத அளவிற்கு உள்ளது.
அதேநேரம் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து வாயே திறப்பதில்லை.
திமுக அதிர்ச்சி
தற்போது அந்த குறையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போக்கியிருப்பதுடன் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமும் அளித்திருக்கிறார்.
மிக அண்மையில் சிவகாசி நகரில் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, “தினமும் நாளிதழ், தொலைக் காட்சிகளில் நல்ல செய்தியை பார்க்க முடியவில்லை. கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்திகள்தான் அதிகம் வருகிறது. பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்துள்ளது. தமிழகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.
திமுகவிற்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். விதியின் விளையாட்டு காரணமாக நான் திமுகவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன. ஆனாலும் தற்பொழுது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்”என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.
இதனால் என்ன காரணத்திற்காக வைகோ திடீரென்று இப்படி பேசினார் என சமூக வலைதளங்களில் சூடான விவாதங்கள் கிளம்பிவிட்டது.
அதே நேரம் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சரியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளது, இரு கட்சிகளிடையே புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டது, கடந்த சில ஆண்டுகளாக அவர் விரும்பியபடியே ஸ்டாலினை முதலமைச்சராகவும் ஆக்கிவிட்டார். தற்போது தமிழக காவல்துறையின் முழுக் கட்டுப்பாடும் ஸ்டாலின் கைகளில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது வைகோ அதை அடியோடு மறந்து விட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.
அரசியல் நோக்கர்களும், வைகோவின் பேட்டியில் வழக்கமான அவருடைய
கொள்கை நிலைப்பாட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
“ஊடகங்களில் இப்போதெல்லாம் நல்ல செய்திகளை பார்க்க முடியவில்லை, குடும்ப கொலைகள் பற்றிய செய்திகளே அதிகம் காணப்படுவதாக அவர் கூறுகிறார். இந்தக் கொலைகளுக்கு 80 சதவீதம் பின்னணி காரணமாக இருப்பது கணவரின் குடிப்பழக்கமும், அதனால் அந்த குடும்பங்களில் உருவாகும் பெரும் பொருளாதார நெருக்கடியும்தான் என்பது அவருக்கு தெரியாதா?…முன்பு மதுபானத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வைகோ இப்போது டாஸ்மாக், போதை பொருட்கள் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?…
அதேநேரம் திமுக அரசை மட்டும் இதில் குற்றம் சாட்டினால் அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று பயந்து, நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
இந்து கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாக உள்ள அவர் விதியின் விளையாட்டு காரணமாக நான் திமுகவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை என்று இப்போது புலம்புகிறார்.
இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. பகுத்தறிவுவாதி என்று தன்னைக் அடையாளப் படுத்திக்கொள்ளும் வைகோ விதியின் விளையாட்டை நம்புகிறாரா?… அல்லது இந்துமத சம்பிரதாயங்களின்படி நடந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு மீண்டும் வந்து விட்டதா?…
திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை என்றால் அவரை வெளியேற்றியது யார்? அதற்கு காரணமாக இருந்தது எது?… என்பதையும் அவர் செய்தியாளர்களிடம் மனம் விட்டு பேசி இருக்கவேண்டும்.
அதுவும் 1993ல் நடந்த விஷயங்களை 29 ஆண்டுகள் கழித்து எதற்காக இப்போது கூற வேண்டும்?… இன்று தனது மகன் துரை. வையாபுரியை மதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு ஆர்வம் காட்டும் வைகோவுக்கு இது தேவைதானா?… வயது மூப்பு அல்லது உடல் நலக்குறைவு காரணமாக அவர் இப்படிப் பேசுகிறாரா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.
கருணாநிதி தனது அரசியல் வாரிசாக ஸ்டாலினை கொண்டுவர முயற்சிக்கிறார் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்திய வைகோ, இப்போது திமுகவின் அடுத்த வாரிசு தலைவராக உருவாக்கப்பட்டு வரும் ஸ்டாலினின் மகன் உதயநிதியை ஏற்றுக் கொண்ட பின்பும், அடுத்து உதயநிதியின் மகன் இன்ப நிதியையும் கூட திமுகவினர் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்ட நிலையிலும் எதற்காக தேவையின்றி மலரும் நினைவுகளை இப்போது பகிர்ந்து கொண்டார்?…
இவற்றை திமுக மீது வைக்கப்படும் மறைமுக குற்றச்சாட்டுக்களாகவே திமுக தொண்டர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் கூட்டணியில் இருந்துகொண்டே வைகோ குண்டு போடுகிறாரே? என்று ஆவேசப்படும் கட்சியின் சீனியர் தலைவர்களில் சிலர் இதை உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் அறிவாலய வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இது உண்மையென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் கூட திமுக ஒதுக்காது என்பதை இப்போதே உறுதியாக கூற முடியும். மேலும் திமுகவில் ஏற்கனவே மதிமுக ஐக்கியமாகி விட்டதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அக் கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கினாலே மிகப் பெரிய விஷயமாக இருக்கும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.