காங்கிரசுடன் மோதும் வைகோ மகன்?…CM ஸ்டாலினுக்கு புது நெருக்கடி!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2022, 10:04 pm
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தந்தையின் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது.
இதை ஓரளவு உண்மை என்று கூறுவதுபோல தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டல பகுதிகளிலும் அவர் அவ்வப்போது திடீரென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் காண முடிகிறது.
துரை வையாபுரியின் புதிய கணக்கு
அதற்காகவே அவர் கட்சியின் தலைமை கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது அரசியலில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.
அவருடைய இந்த சுற்றுப்பயணம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும், திமுகவிடம் குறைந்தபட்சம் 2 எம்பி தொகுதிகளையாவது கேட்டு பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அதேநேரம், சட்டப்பேரவைத் தேர்தலிலோ நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிட தனக்கு துளியும் விருப்பமில்லை என்று கூறிக்கொள்ளும் துரை வையாபுரியின் பேச்சில் சமீபகாலமாக சில மாற்றங்கள் தென்படுவதையும் உணர முடிகிறது. அதில் ஒன்றுதான்
மிக அண்மையில் சிவகாசி நகரில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டம்.
வைகோ மகன் வைத்த ட்விஸ்ட்
இதில், 2024ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் துரை வையாபுரி போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.
இதில் கலந்துகொண்ட பின்னர் துரை வையாபுரி செய்தியாளர்களிடம் பேசும்போது,”செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழிலான பட்டாசு, தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும்போது அதன் உரிமையாளர்களைக் கைதுசெய்வதைத் தவிர்க்க வேண்டும்.
2024 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதே நேரம் கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்.
மேலும் திமுக கூட்டணியில் தற்போது இருப்பதால், கூட்டணிக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அதற்கான வாய்ப்பை வழங்கினால் நிச்சயம் போட்டியிடுவேன்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
உதயநிதி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்களித்த பின்னர் தான் அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். மக்கள் ஏற்று கொண்டபின் தற்போது அவர் அமைச்சராகி உள்ளார். இவருடைய மகன் என்பதற்காக ஒருவர் பதவிக்கு வரக்கூடாது எனக்கூறுவது ஜனநாயக விரோதம். சனாதன எதிர்ப்பு என்ற அடிப்படையில் எப்போதும் திமுகவுடன் மதிமுக இணைந்து செயல்படும்.
இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் தொகுதியிலுள்ள பிரச்னைகளைச் சரிசெய்ய முயற்சிப்பேன்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் முக்கியக் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. பால் விலை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசுதான் காரணம்” என்று பொங்கினார்.
அடிமனதில் போட்டியிட ஆசை
செய்தியாளர்களிடம் எனக்கு 2024 தேர்தலில் போட்டியிட ஆசை இல்லை என்று துரை வையாபுரி கூறினாலும் கூட அவருடைய அடி மனதில் எப்படியும் இந்த முறை விருதுநகர் தொகுதியை மதிமுகவுக்காக போராடி வாங்கி, அதில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றும் விடவேண்டும் என்கிற துடிப்பு அவரிடம் இருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
இதன் பின்னணியில் சில காரணங்களும் உண்டு. விருதுநகர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே வைகோவின் தீவிர அனுதாபிகள் மூலம், துரை வையாபுரி தன்னை நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவதும் அதில் ஒன்றாகும்.
தானாக அந்த ஆசையை வெளியிட்டால் திமுக கூட்டணி கட்சியினர் அதை ஏளனமாக பார்க்கக்கூடும் என்று கருதி துரை வையாபுரி இப்படி தனது கட்சிக்காரர்களை வைத்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார், என்கிறார்கள்.
மதிமுகவினரை கட்டாயப்படுத்திய வைகோ மகன்?
இத்தனைக்கும் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு 2021 தேர்தலில் என்னைப் போட்டியிட மதிமுக நிர்வாகிகள் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதுதான் எனது நோக்கமாக இருந்தது என்று சொன்னவர்தான் துரை வையாபுரி.
ஆனால் இப்போதோ கட்சியும், திமுக தலைவர் ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்தால் தேர்தலில் போட்டியிட தயார் என்று அப்படியே ‘யூ டேர்ன்’ அடிக்கிறார்.
திடீரென அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவது ஏன்?…
அரசியல் விமர்சகர்கள் கருத்து
அரசியல் விமர்சகர்கள் இது பற்றி கூறியதாவது: “ஸ்டாலினை வைத்து கருணாநிதி வாரிசு அரசியல் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டி1993ம் ஆண்டு இறுதியில் திமுகவில் இருந்து வெளியேறியவர்தான் வைகோ. ஆனால் கருணாநிதியின் மறைவுக்குப் பின்பு முதலமைச்சர் பதவியில் ஸ்டாலினை உட்கார வைக்க சபதம் எடுத்திருக்கிறேன், அதை நிறைவேற்றியே தீருவேன் என்று முழக்கமிட்டு 2021 தமிழக தேர்தலில் திமுகவுக்காக தீவிர பிரச்சாரமும் செய்தார். அவருடைய கட்சியும் திமுக தலைமை அளித்த கடும் அழுத்தத்தை ஏற்று 6 தொகுதிகளில் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டது.
தேர்தலில் திமுகவும் ஆட்சியை கைப்பற்றியது. மதிமுகவுக்கும் 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
வைகோவுக்கு திமுக பாராட்டு
வைகோ, தான் சொன்னதை செய்து விட்டார் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் அவரைப் பாராட்டவும் செய்தனர். இதனால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வைகோ மீதான மதிப்பும், மரியாதையும் கூடியது. இதை வைத்துத்தான் துரை வையாபுரி திமுகவிடம் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இதற்காக உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையும், தன் மீதும் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் கவனமாக வார்த்தைகளை கையாண்டு தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.
தவிர சம்பந்தமே இல்லாமல், பால் விலை உயர்வுக்கும் மத்திய அரசுதான் காரணம் என்கிறார். அதேநேரம் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்தும் கூட தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவற்றின் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை என்பதை தனக்கு வசதியாக மறந்துவிட்டு மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார்.
விருதுநகருக்கு விண்ணப்பம்?
இதனால் தந்தையின் மீது உள்ள மரியாதையின் காரணமாக தனக்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஸ்டாலின் கொடுத்து விடுவார் என்று துரை வையாபுரி உறுதியாக நம்புகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் வரை விருதுநகர் தொகுதி வைகோவின் மகனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தம்.
ஏனென்றால் ராகுல் காந்தியுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டுள்ள மாணிக்கம் தாக்கூர், தற்போது விருதுநகர் தொகுதியின் எம்பி ஆக உள்ளார். அவரே மீண்டும் இங்கு போட்டியிட சீட் வாங்கியும் விடுவார். அப்படி இருக்கும்போது, வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு விருதுநகர் தொகுதி கிடைக்குமா?…என்பது சந்தேகம்தான்.
மேலும் தற்போது வைகோ, ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் நிலையில் அவருடைய மகனையும் அங்கு அனுப்பி வைக்க திமுக விரும்பாது.
தலையசைக்குமா திமுக?
அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற எண்ணம் துரை வையாபுரியிடம் தீவிரமாக எழுந்துள்ளது. தந்தை நல்ல நிலையில் இருக்கும்போதே திமுகவின் ஆசியுடன் எம்பி ஆகிவிட வேண்டும் என்கிற ஆசையும் அவரிடம் ஏற்பட்டிருக்கிறது.
ஒருவேளை, திமுக சின்னத்தில் போட்டியிட அறிவாலயம் வற்புறுத்தினால் அதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், துரை வையாபுரிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உண்டு. இப்படி தலையைச் சுற்றி மூக்கை தொடுவதை விட, மதிமுகவை திமுகவுடன் இணைத்து விட்டால் இந்த கேள்விக்கே இடம் இருக்காது. தவிர இப்போது கூட திமுகவுடன் மதிமுக ஐக்கியமாகிவிட்ட நிலையில்தான் இருக்கிறது. அது தனிக் கட்சியாக செயல்படுவது போல் தெரியவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள்
கூறுகின்றனர்.