வைகோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!’டமால்’ ஆகிறது மதிமுக!!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2022, 6:49 pm
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபகாலமாக, தனது கட்சியை சரியாக வழிநடத்த தெரியாமல் திண்டாடி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.
அதுவும் மகன் துரை வையாபுரியின் நேரடி அரசியல் நுழைவுக்கு பின்பு மதிமுகவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், சரி செய்யப்படாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் கண்கூடு.
மதிமுக பொதுச்செயலாளர் ஆனார் வைகோ மகன்!!
2021 சட்டப் பேரவை தேர்தலின் போது துரை வையாபுரி மதிமுகவின் ஐடி விங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த அக்டோபர் மாதம் நடந்த மதிமுக பொதுக் குழு கூட்டத்தில் வைகோவின் உடல் நலிவை காரணம் காட்டி துரை வையாபுரி தலைமைக் கழக செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று
அறிவிக்கப்பட்டது.
மதிமுகவில் வெடித்த சர்ச்சை
அப்போது இதற்கு 10 மாவட்ட செயலாளர்களிடையே கடும் எதிர்ப்பும் கிளம்பியது. என்னதான் ஜனநாயக முறைப்படி துரை வையாபுரியின் பெயர் தலைமைக் கழக செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டாலும் கூட கட்சிக்காக ஒரு சில ஆண்டுகள் மட்டுமே உழைத்தவருக்கு இப்படி உயர் பதவி கொடுக்கலாமா? என்ற பெரும் கொந்தளிப்பு மதிமுகவினரிடம் எழுந்தது.
குறிப்பாக, சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டிஆர்ஆர் செங்குட்டுவன் ஆகியோர் கூறும்போது ‘மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். இந்த கட்சி திமுகவில் இருந்து பிரியும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக சொல்லித்தான் பிரிந்தது. இப்போதும் அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக்கும் எண்ணத்துடன் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார். அதனால், இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்.மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்” என்றனர்.
கூடியது பொதுக்குழு
மதிமுகவில் எழுந்துள்ள இந்த கிளர்ச்சி இன்னும் அடங்கவில்லை. இந்நிலையில்தான் துரை வையாபுரியை தலைமைக் கழக செயலாளர் பதவிக்கு முறைப்படி தேர்வு செய்ய கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையில் வைகோ பொதுக்குழுவை கூட்டினார்.
அதற்கு மதிமுக அவைத் தலைவர் துரைசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம், செங்குட்டுவன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கையில் அவசர ஆலோசனை நடத்தி போர்க்கொடியும் உயர்த்தினர்.
மதிமுக செயலாளரானார் துரை வையாபுரி
எனினும் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் எடுத்த முடிவின்படி துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கிட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. அவர் இந்த பதவிக்கு ஒருமனதாக தேர்வும் செய்யப்பட்டார்.
அதேநேரம் துரை வையாபுரிக்கு எதிராக செயல்படுபவர்கள் துரோகிகள் என்று வைகோ பொதுக் குழுவில் கடுமையாக சாடியதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாவும் கூறப்படுகிறது.
எதிர்ப்பு தெரிவித்த செங்குட்டுவன்
இந்த நிலையில்தான், மதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே வைகோவுடன், அரசியலில் பயணித்து வரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் மதிமுக ஆட்சிமன்றக் குழு செயலாளருமான செங்குட்டுவன் வைகோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அனல் பறக்கும் அந்த கடிதத்தில் வைகோவை கொதிப்படையச் செய்யும் விதமாக பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியிருக்கிறார்.
“எந்தெந்த தேர்தலில், எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என கள நிலவரத்தை அறிந்து, உயர்நிலைக் குழுவில் விவாதித்து, தேர்தலில் போட்டியிட்டிருந்தால் பல நிர்வாகிகள் கை காசை இழந்து, வீதிக்கு வந்திருக்கும் நிலை உருவாகியிருக்காது.
மதிமுக உயர்நிலைக்குழு அவசியமற்றது
நீங்கள் எப்போதும் உயர்நிலைக் குழுவை கலந்து ஆலோசிக்காமல் உங்கள் முடிவை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள். தற்போதும் உங்கள் முடிவை நிலை நாட்டி உள்ளீர்கள்; அது உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. இனிமேல் மதிமுகவில் உயர்நிலைக் குழு அவசியமற்றது. உயர்நிலைக் குழுவில் ஒன்பது பேர் அங்கம் வகிக்கிறோம்.
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தேர்வில் துரை வையாபுரியின் தலையீடு இருந்தது. கட்சிப் பொறுப்பில் இல்லாத ஒருவர் வேட்பாளர் தேர்வில் எவ்வாறு ஈடுபட முடியும்? உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
துரோகிகள் யார்? தியாகிகள் யார்?
நாங்கள் துரோகிகள் என்றால், தியாகிகள் யார்? என்பதை தெரியப்படுத்த வேண்டும். பொதுக்குழு மேடையில், ‘துரோகிகள் ஓரிருவர் இன்னும் இங்கு உள்ளனர்’ என சொன்னீர்களே, அந்த இருவர் யார்?” என்று ஆவேசத்துடன் வைகோவுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
செங்குட்டுவன் மட்டுமே இப்படி வெளிப்படையாக கடிதம் எழுதி யிருந்தாலும் கூட மதிமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்ற பரபரப்பு பேச்சும் உள்ளது. ஆனால் அவர்கள் வைகோவுக்கு எதிராக எதுவும் கருத்து கூற முடியாத நிலையில் உள்ளனர், என்கிறார்கள்.
எனவே மதிமுக விரைவில் காலாவதியாகி விடும் அபாயமும் உருவாகி உள்ளது.
கட்சி விட்டு கட்சி தாவும் வைகோ
இதுகுறித்து தமிழக அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயலாளர் செங்குட்டுவன் எழுப்பியிருக்கும் கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் எந்தத் தேர்தலிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சரியான முடிவை எடுத்ததில்லை.
9 தொகுதிகளை மட்டும் ஜெயலலிதா ஒதுக்கினார் என்பதால் 2011 தேர்தலையே புறக்கணித்தார். 2016-ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்து படுதோல்வி கண்டார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது கட்சிக்குள் பெரும் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடும் நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு ஒப்புக்கொண்டதால்தான் வைகோவுக்கு டெல்லி மேல்சபை எம்பி பதவி தர திமுக சம்மதித்தது.
மதிமுகவை திமுகவிடம் அடகு வைத்த வைகோ
அதனால் தனது சுயலாபத்திற்காக கட்சியை திமுகவிடம் அடகு வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் அப்போது அவர் மீது எழுந்தது.
1996 முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் மதிமுக, தனது சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனது அதுதான் முதல் முறை. அதேபோல 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே களமிறங்கி, 4 தொகுதிகளில் வெற்றி கண்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை கட்சியின் பம்பரம் சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்று உறுதிபட கூறிவந்த வைகோ, கடைசியில் திமுகவின் நிபந்தனையை ஏற்க வேண்டியதாகிப் போனது.
மதிமுக எம்பிக்களா? திமுக எம்பிக்களா?
தற்போதும் மதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேரும், கணேசமூர்த்தி எம்பியும் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படும் நிலை உள்ளது.
தன் மீது கொலைப்பழி சுமத்தி திமுக வெளியேற்றியபோது, கருணாநிதி தனது குடும்ப வாரிசுக்காக இப்படி அரசியல் செய்கிறார் என்று வைகோ 1993 இறுதியில் கொந்தளித்தார். ஆனால் இப்போது ஸ்டாலினிடம் சரணாகதி ஆகிவிட்டார். இதுதான் மதிமுகவினரிடம் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைகோ கட்சி தொடங்காமல் இருந்திருந்தால் நாங்கள் திமுகவிலேயே தொடர்ந்து நீடித்து இருப்போம். எம்எல்ஏவாகவோ, எம்பியாகவோ, அமைச்சராகவோ ஆகி இருப்போம். அதை வைகோ கெடுத்து விட்டார். ஆனால் அவர் மட்டும் டெல்லி மேல்-சபை எம்பி பதவியை பெற்றுவிட்டார் என்கிற எண்ணம் மதிமுக மாவட்ட செயலாளர்களிடம் ஆழமாக பதிந்து விட்டது. இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்றுதான்.
அதுமட்டுமல்ல, தன் கொள்கைக்கு எதிராக தனது வாரிசிடமே கட்சியின் முக்கிய பதவியை கொடுத்து விட்டார். எனவே இனி வைகோவுக்கு குடும்ப அரசியல் பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. அதனால் அனைவரும் திமுகவில் இணைந்து விடலாம் என்ற முடிவுக்கு மாவட்ட மதிமுக செயலாளர்கள் வந்து விட்டதையும் உணர முடிகிறது. எனவே அக்கட்சிக்குள் விரைவில் பிளவு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.
0
1