பூணூலை அறுப்பதா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீரபாண்டியன் உதாரணம் : விளாசிய வானதி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 3:06 pm
Vanathi Vs Suba Veerapandian - Updatenews360
Quick Share

‘கிழக்கு பதிப்பகம்’ உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை முட்டாள் என, ‘டுவிட்டர்’ வாயிலாக விமர்சித்து இருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர். அவரை தமிழ் இணைய கல்வி கழக ஆலோசனை குழுவில் இருந்து, தமிழக அரசு நீக்கியுள்ளது.

இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது.’இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாது’ என, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன்.

தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார். இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு.
ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது. எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு.

அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா?

பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு.க.,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.

தி.மு.க., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.க., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது.

பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.க., இயக்கம் தி.மு.க.,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.

தி.மு.க.,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர்.

அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம்.

இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?

பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.க., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்’ பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.க., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா?

தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரே… அவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 746

    0

    0