தமிழர்கள் இந்து இல்லையா? அப்ப வேற யாரு இந்துக்கள்? இயக்குநர் வெற்றிமாறனுக்கு எதிராக களமிறங்கிய வானதி சீனிவாசன்!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2022, 8:56 am
பா.ஜ.க, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.சி.க தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.
உலகே வியக்கும் அளவுக்கு தஞ்சையில் சிவபெருமானுக்கு பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். அவருக்கு, ‘சிவபாத சேகரன், சோழ நாராயணன், திருமுறை கண்டசோழன்’ என, பல பெயர்கள் உண்டு.
சோழர்கள் ஆண்ட நாடுகளில் எல்லாம், சிவபெருமானுக்கு கோவில் கட்டி உள்ளனர்.சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், ஹிந்து வழிபாடு பற்றியும், சிவன், பிரம்மா, விஷ்ணு என்று ஹிந்து கடவுள்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன.
தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய படையெடுப்பால் இங்கு அந்நிய மதங்கள் வந்துள்ளன.சேர, சோழ, பாண்டியர்கள் கட்டிய, 30 ஆயிரம் கோவில்கள் இங்கு உள்ளன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளை கடந்து நம் இந்து வழிபாட்டு அடையாளமாக உள்ளது.
இன்றும், இந்தியாவில் பிற மதங்களின் ஆதிக்கம் உள்ளது; மத மாற்றங்கள் தொடர்கின்றன. இந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு. ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று சொல்லவும் துணிந்திருக்கின்றனர்.
இது, இந்து கலாசாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால், இந்த மண்ணில் வேறு யாருமே இந்து இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.