இவங்களே குண்டு வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம் : முதலமைச்சர் சொன்னதை திருப்பி விட்ட வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 5:53 pm

பாஜக மாநிலச் செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை.

அந்த அறிக்கையில், ‘பாஜக மாநிலச் செயலாளர் தம்பி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு, திமுக அரசு, என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு பதற்றத்தில் உள்ளது. 1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கியபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக இப்படிதான் கோரத்தாண்டவம் ஆடியது.

ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கும் முதலமைச்சர் பதவி பற்றி திமுகவினரால் கனவு கூட காண முடியவில்லை. திமுகவினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி வகுப்பெடுப்பார்கள்ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குதான். அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறி விடுவார்கள்.

அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக தம்பி எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்குமுறைக்கும் பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் உள்ளிட்ட சிலரது டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கிய போது, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல” என்றார். இதையே அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

  • Otha Ottu Muthaiya trailer release நக்கல் மன்னன் கவுண்டமணியின் கவுண்டர் அட்டாக்…’ஒத்த ஓட்டு முத்தையா’ பட ட்ரைலர் வெளியீடு..!