வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து… உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம்… ஆனால், மனநிறைவு… என்ன சொல்கிறார் ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
31 March 2022, 10:14 pm

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது. இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

2018 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102வது திருத்தமும், 2021ஆம் ஆண்டில் 105வது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?, ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?, அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?,

சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?, வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?,

எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? ஆகிய 7 வினாக்களை எழுப்பியிருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, அவற்றின் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால், உயர்நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் ஐந்தாவது காரணம் தவிர மீதமுள்ள 6 காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி பரிந்துரைத்து வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை மற்றும் கடிதத்தில் சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி தான் வன்னியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு நினைத்தால், தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பெற்று, புதிதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பொருள் ஆகும்.

அந்த வகையில் இது சாதகமானதே. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். தமிழக அரசு அதை நிச்சயம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும், என்று தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1338

    0

    0