இதை தடுத்து நிறுத்தியே ஆகனும்.. அதுவே கொலை செய்யப்பட்ட VAO லூர்துக்கு செய்யும் உண்மையான மரியாதை ; கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
Author: Babu Lakshmanan27 April 2023, 5:08 pm
தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்துவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேற்குறிப்பிட்ட கிராம நிர்வாக அலுவலர், தான் முன்பு பணியாற்றிய இடங்களாயினும், தற்பொழுது பணியாற்றக்கூடிய இடமாயினும் மணல் – கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவர் தான் பணியாற்றி வந்த முறப்பநாடு எல்லைக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கொள்ளையர்கள் இப்பொழுது அவரையே வெட்டிச் சாய்த்து இருக்கிறார்கள்.
லூர்து பிரான்சிஸ் அவருடைய குடும்பத்தாருக்கு 1 கோடி நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதே வேளையில் இந்த நட்ட ஈடு மட்டுமே தீர்வாகாது. அவரது கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து, வழக்கை விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதும்; தமிழகத்தில் இதுபோன்ற மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளைகளை அறவே தடுத்து நிறுத்துவதும் தான் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை ஆகும்.
தமிழகத்தில் பரவலாக கனிமவள பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடக்கூடிய வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் இது போன்று நடந்த சம்பவங்கள் பல உண்டு. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளித்திட வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.