விஏஓ கொலை செய்யப்பட்டும் இன்னும் திருந்தலையா? கனவுலகில் மிதக்கும் CM… முடிவுக்கட்ட பாஜக ரெடியாக இருங்க : அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2024, 7:14 pm
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில், மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கோட்டாட்சியர் திருமதி தெய்வநாயகி மற்றும் அவரது உதவியாளர்கள் பயணம் செய்த வாகனம் மீது, லாரி ஏற்றிக் கொல்ல முயன்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் அராஜகம் அதிகமாகியிருக்கிறது. மணல் கடத்தலை எதிர்த்த கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், தனது அலுவலகத்திலேயே வைத்து மணல் கடத்தல்காரர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது போன்ற குற்றச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் கூட, திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தொடர்ந்து சேலம், வேலூர் என மணல் கடத்தல்காரர்கள் அரசு அதிகாரிகளைத் தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அரசு அதிகாரிகளுக்கே உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் விழுந்து கிடக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயுத கலாச்சாரம் நிலவுகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, அதன் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டிருக்கின்றன.
மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊடகங்களை மிரட்டி, செய்திகளைப் பொதுமக்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியில்தான் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இவை பற்றி எதுவுமே அறியாமல், கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அரசின் தலையாய கடமையான சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில், திமுக அரசு முழுமையாகத் தோல்வியுற்றிருக்கிறது.
திமுக அரசு இனியும் விழித்துக் கொள்ளாவிடில், பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சியாக
தமிழக பாஜக மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.