ஒரே நேரத்தில் அதிரடி காட்டிய விசிக, சிபிஎம்?…கொந்தளிக்கும் நிர்வாகிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
22 அக்டோபர் 2023, 7:49 மணி
Neet - Updatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும்
6 மாதங்கள் உள்ள நிலையில் ஏன் இப்படி முன்கூட்டியே கருத்து தெரிவிக்கின்றன, இதன் பின்னணிதான் என்ன? என்ற கேள்விகள் அரசியல் களத்தில் புரியாத புதிராகவே பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணம் ஓரளவு யூகிக்கக் கூடியது என்றாலும் கூட திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இப்படி சொல்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அதேநேரம் பாஜக கூட்டணியில் இருந்து, நிரந்தரமாக அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பின்பு திமுக கூட்டணி கட்சிகளிடம் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருப்பது நிஜம்!

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை “தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் நாங்கள் எப்போதும் இருப்போம்” என்று உறுதியாக கூறி வந்த விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் இப்படி ஒரே நாளில் மீண்டும் ஒருமுறை சத்தியம் செய்யாத குறையாக நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். வேறு எங்கும் போக மாட்டோம்” என்றுதான் தன்னிலை விளக்கம் அளித்து வந்தன.

அதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் விசிக தலைவர் திருமாவளவன், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் மனதார வரவேற்பேன் என்று அதிரடியாக கருத்து தெரிவித்து திமுக தலைமைக்கு நெருக்கடி அளித்தார். தவிர அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோதும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அதனால் ஸ்டாலினும் அன்று இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இன்றோ திருமாவளவன் எதிர்பார்த்தது நடந்து விட்டது. ஏற்கனவே வேங்கை வயல், திருமலைகிரி, நாங்குநேரி போன்ற இடங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களை தட்டிக் கேட்க முடியாமல் மனம் புழுங்கி கொண்டிருந்த அவருக்கு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது புதுத் தெம்பை தருவது போலவும் அமைந்தது.

இதனால் அதிமுக கூட்டணியில் விசிக இணையுமா? என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. தவிர அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமாவளவனை எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் அழைத்து நலமும் விசாரித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

மேலும் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், திமுக மீது அதிருப்தியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

இதன் அடிப்படையில்தான், விசிக – அதிமுக கூட்டணியில் இணையப் போகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த வடக்கு மண்டல விசிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், திருமாவளவன் பேசும்போது “கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்துக் கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாகவே இருக்கிறது. மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்றுதான். நாடாளுமன்ற தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக உழைக்க வேண்டும்.
40 தொகுதியிலும் நமது கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதுவே விசிகவின் சபதம்.

நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். உடனே திமுகவை பலவீனமாக்குவதற்காக திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக வதந்திகளை பரப்பினார்கள்.

ஒரு சமூக இயக்கமாக இருந்துகொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது. பயிற்சி இன்றி யாரும் எந்த விளையாட்டிலும் வெற்றி பெற முடியாது. அரசியல் பல சூழ்ச்சிகள் நிறைந்த களம். அதில் வெல்வதற்கு பயிற்சி தேவை. திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால்போதும் என்று இருக்கக்கூடாது. 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு உழைக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்பதை விசிக தலைவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

திருமாவளவன் இப்படி சொன்ன அதே நாளில், ஈரோடு நகரில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனும் திமுக கூட்டணி பற்றி கருத்து தெரிவித்தார்.

“தமிழகத்தில் இருந்து வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில், தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்காததால் தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

பாஜகவின் அனைத்து செயலுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சி முடியும் தறுவாயில் ஆதரவை திரும்பபெறும் அதிமுகவை பொதுமக்கள் அறிவார்கள். இந்த இரு கட்சிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். அதிமுக தனியாக வந்ததால், திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் சேராது. அதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அதேநேரம் திமுக கூட்டணியில் எந்த புதிய கட்சியும் இதுவரை இணைய முன்வரவில்லை. ஏற்கனவே உள்ள கட்சிகளே, அந்த கூட்டணியில் நீடிக்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

“இவர்கள் இருவர் பேச்சிலுமே முரண்பாடுகள் இருப்பதை காண முடிகிறது. அது எதிர்காலத்தில் அவர்களது கட்சியின் தேய்மான பாதையாகவும் அமையலாம்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“திருமாவளவன் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசும்போது
நான் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருந்து விடக் கூடாது. 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு உழைக்கவேண்டும் என்று கூறுகிறார். அப்படியென்றால் கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வேலை பார்க்கக் கூடாது, ஓட்டு போடக் கூடாது என்ற எண்ணம் விசிக தொண்டர்களின் அடி மனதில் உருவாகி விட்டிருக்கிறது என்றும் இதை எடுத்துக்கொள்ள தோன்றுகிறது.

இது, கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதுவும் நடந்து விடவில்லை. மாறாக அநீதி இழைக்கப்படும் வகையில் பல்வேறு கொடூரங்கள்தான் நடந்துள்ளன. அதற்காக ஏன் நாம் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற மன நிலையை விசிக தொண்டர்களிடம் ஏற்படுத்தி விட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இல்லையென்றால் திருமாவளவன், நான் வெற்றி பெற்று விட்டால் போதும் என்று இருக்கக்கூடாது என வாக்குச்சாவடி முகவர்களிடம் வேண்டுகோள் விடுக்க அவசியமே இல்லை. இதன் மூலம் விசிக போட்டியிடாத தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக அக் கட்சி தொண்டர்கள் வாக்களிப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காததால்தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்று
கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா திமுக தலைவர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்?

இது போன்றதொரு காரணத்தை இதுவரை முதலமைச்சர் ஸ்டாலினே கூட கூறாத நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கூறுவது நல்ல நகைச்சுவை. கடந்த ஆண்டு திமுக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியபோது இதே பாலகிருஷ்ணன்தான் தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்து அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று திமுக அரசை வற்புறுத்தவும் செய்தார். அதற்காக அவர் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டது தனிக் கதை.

அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட்
ஆதரவு கொடுப்பதும், கொடுக்காதும் அவர்களது கட்சியின் விருப்பம். அதைச் சொல்வதற்கு அவருக்கு தகுதியும், உரிமையும் இருக்கிறது. ஆனால் பாஜகவின் அனைத்து செயலுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சி முடியும் தறுவாயில் என்று அவர் கூறுவதைதான் ஏற்க முடியவில்லை.

ஏனென்றால் 1999-ம் ஆண்டு பாஜக தலைமையிலான வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பிடித்த முரசொலி மாறன் 2003ல் மரணம் அடையும் நேரம் வரை
பல வாரங்கள் கோமா நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவருக்கான எல்லா மருத்துவ செலவுகளையும் அப்போது வாஜ்பாய் அரசே ஏற்றுக் கொண்டது.

ஆனால் அவர் இறந்த பிறகு சில மாதங்கள் வரை மத்திய அமைச்சரவையில் நீடித்து விட்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய போது பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேறி காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை பாலகிருஷ்ணன் என்னவென்று சொல்வார்?…

அதேபோல நாட்டையே உலுக்கிய மதுரை மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலரான 40 வயது வில்லாபுரம் லீலாவதி 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பட்டப் பகலில் திமுகவினரால் வெட்டிக் கொல்லப்பட்டதை மறந்துவிட்டு பல தேர்தல்களில் அதே கட்சியுடன் மார்க்சிஸ்ட் கூட்டு வைத்துக் கொண்டதே இதை என்னவென்று சொல்வது?… இத்தனைக்கும் தனது வார்டு மக்களுக்கு இலவசமாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ததால்தானே லீலாவதி வெட்டிக் கொல்லப்பட்டார்?… இந்த விஷயங்கள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது என்று பாலகிருஷ்ணனும், மதுரை எம்பி சு. வெங்கடேசனும் நினைக்கின்றனரோ?…

இதெல்லாம் அரசியலில் சகஜம், சர்வ சாதாரணம் என்றால் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதை மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரம் இன்னொரு கேலிக்கூத்து என்னவென்றால், திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறாது என்று கூறுவதற்கு பாலகிருஷ்ணனுக்கு உரிமை உள்ளது. ஆனால் திமுகவுடன் உள்ள எந்த கட்சியும் அதிமுகவுடன் சேராது என்று ஒட்டு மொத்தமாக எப்படி அவரால் சொல்ல முடியும்? அவர் தமிழகத்தில் இண்டியா கூட்டணியின் தலைவராக இருக்கிறாரா என்ன?…

இப்படி திமுகவை ஒரேயடியாக தூக்கிப் பிடிப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் எம்பி சீட்டே கொடுக்காவிட்டால் கூட திமுகவை ஆதரிப்பதில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம் என்பதையே அவருடைய பேச்சு காட்டுகிறது.

திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் இருவரும் போகிற போக்கைப் பார்த்தால் அந்தக் கட்சிகளின் தொண்டர்களும், தோழர்களும் கூட்டணி மாறி வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

அதுமட்டுமல்ல திமுகவில் ஐக்கியமாகிவிட்ட வைகோவின் மதிமுகவின் நிலை போல விசிக, தமிழக மார்க்சிஸ்ட் கட்சிகளின் எதிர் காலமும் மாறலாம். இன்னும் இரண்டு தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் நீங்களும் அடிமையாக செயல்படும் நிலை உருவாகிவிடும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ விசிக, தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்கள் எதற்காக ஒரே நேரத்தில் கூட்டணி பற்றி இப்படி பேசினார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 333

    0

    0