இது தான் பாஜகவின் செயல் தந்திரம்… பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A. கூட்டணியின் யுக்தி என்ன தெரியுமா..? போட்டுடைத்த திருமாவளவன்!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 12:12 pm

கவர்னர், IT,ED மூலம் பாஜக இல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நெருக்கடி தருவது பாஜகவின் செயல் யுக்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகம் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் மோகன் அவர்களின் திருவருவப்படத்தை திறக்கவும் விடுதலை சிறுத்தைகளை கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- டிசம்பர் 23 அன்று திருச்சிராப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் என்ற மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் என்று உரக்கக் கூறுவதாக இந்த மாநாடு அமையும். ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. குறிப்பாக பாரத் ஜூடோ யாத்திரையடுத்து காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். ஆட்சியில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே இந்தியா கூட்டணியின் யுக்தியாக உள்ளது. ஒற்றை நோக்கத்தை வலியுறுத்தும் மாநாடாக தங்களுடைய மாநாடு அமையும்.

திராவிடம்,பௌத்தம் என்கின்ற அரசியலை இந்த மண்ணில் முதன்முதலாக விதைத்த பெருமைக்குரியவர் பண்டிதர் அயோத்திதாசர். அவருக்கு மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என்று தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மணிமண்டபத்தை திறப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னையில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் முதல்வர் அதிகாரிகளுடன் நேரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் உடல் நலம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.

இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.நா. மற்றும் உலக நாடுகள் இந்து மத கோயில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தாங்கள் இந்துக்களுக்கான கட்சி என்று கூறிக் கொள்ளும் பாஜக, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கப்படுவதை கண்டுகொள்ளவில்லை.

இலங்கையில் இந்து வழிபாட்டு தலங்களை இடித்துவிட்டு பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைத்து இலங்கை அரசு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. தமிழ் தேசிய இன உணர்வை மங்கச் செய்யும் வகையில் பாஜக இத்தகைய செயலை கண்டிக்காதது வேதனையாக இருக்கிறது.

மேலும் விக்னேஷ்வரன் அறிக்கையின் அடிப்படையில் தமிழர்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்களர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் கவர்னர் மூலமாகவும், IT மட்டும் ED மற்றும் சிபிஐ மூலம் நெருக்கடி கொடுப்பது என்பது பாரதிய ஜனதா கட்சியின் செயல் தந்திரமாக உள்ளது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை கற்பிப்பார்கள், என தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ