பெரியார், அம்பேத்கரை படிக்காததால்தான் அதிமுகவுக்கு இந்த நிலை… விசிக இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது : திருமாவளவன் பரபர பேச்சு!!
Author: Babu Lakshmanan1 July 2022, 10:46 am
2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி காப்போம் என்கிற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமையில் கோ.புதூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொது கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது :- தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விசிக செயல்பட்டு வருகிறது. விசிக தேசிய அளவில் பரவியுள்ளது. விசிக கொடி விடுதலை கொடியாக உள்ளது. அங்கனூர், சென்னைக்கு அடுத்து என்னை வாரி அனைத்து கொண்டது மதுரை. அரசு வேலைக்காக நான் மதுரைக்கு வந்தேனா..? அல்லது மக்களுக்காக நான் வேலை செய்ய வந்தேனா என தெரியவில்லை. மதுரை மண் என் வாழ்வில் என்னை மடைமாற்று செய்த மண்.
மதுரை மண் தான் என்னை பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தது. விசிகவின் ஒவ்வொரு முழக்கத்திற்கும் ஒரு பிரச்சினை, பின்புலம் உள்ளது. வாக்கு வங்கியை நிரூபிக்காமல் திமுக, அதிமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றது. விசிகவை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.
மேலவளவு படுகொலை அரசியல் அறியாமையால் நடந்துள்ளது. வன்முறை உண்டாக்க ஒரு ரவுடி போதும், அமைதியை உண்டாக்க ஒரு தலைவானால் மட்டுமே முடியும். திரௌபதி முர்மு, எல்.முருகன் பாகன் கையில் இருக்கும் யானை போன்றவர்கள். பாஜக சொல்வதை தான் திரௌபதி முர்மு, எல்.முருகன் செய்வார்கள்.
2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தில்தான் கை வைப்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நாடு விடுதலைக்கு முன்பான இந்து மகாசபை என்ற இயக்கத்தை வைத்திருந்தார்கள். பெண்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரம், ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. மெல்ல மெல்ல ஆயுதமில்லா ஆயுதமாக வந்தது தான் அரசியலமைப்பு சட்டம்.
அரசியலமைப்பு சட்டம் தான் சமூகத்திற்கு கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தையும் கொடுத்தது. ராமன் இப்படி தான் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேத காலத்தில் பிராமணர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க முயன்றார்கள். அப்படி தான் உத்திரபிரதேசத்தில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள். ஆயிரம் பேரில் 10 சதவீத பேருக்கு சமஸ்கிருத பெயரை மன்னர்கள் துணையோடு பிராமணர்கள் வைத்தது சதி செய்தார்கள். பிராமணர்களுக்கு நாடு இல்லை என்பதால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கொள்கை என்ற ஹிட்லரின் கொள்கையை பின்பற்றி கோஷம் இடுகின்றனர்.
யூதர்களை இலுமினாட்டிகள் என கூறுகின்றனர். அப்படிதான் பணமதிப்பிழப்பு, தனியார்மயம், ஜி.எஸ்.டி, புதிய பென்சன் என்கிற திட்டங்கள் உள்ளது. ஒரு புறம் சனாதான பாதுகாப்பு, ஒரு பக்கம் கார்ப்பரேட் பாதுகாப்பு. அனைத்து துறைகளும் தனியாருக்கு கொடுத்து விட்டு அரசாங்கமே மதுவை விற்பனை செய்கிறது. உழைக்கும் மக்களை வீணாக்கும் மது விற்பனை, நாடு முழுவதிலும் உள்ளது.
மது குடித்தால் சாதி தான் தெரியும், அரசியல் தெளிவு தெரியாது. டாஸ்மாக் இளைஞர்களின் மூளையை சிந்திக்க விடுவதில்லை. உழைப்பவனை குடிக்க வைக்கிறது. இந்தியா மதசார்பற்ற தேசமாக இருக்க வேண்டும் என எண்ணியவர் மகாத்மா காந்தி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றார் காந்தி.
ராம பக்தரான காந்தியை ஏன் சுட்டுக்கொன்றார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். காந்தியை சுட்டு கொன்ற ஆர்.எஸ்.எஸ். நாதுராம் கோட்சேவை வணங்குகிறது ஆர்.எஸ்.எஸ். நூபுர்சர்மா, நவின் ஷிண்டால் பேசியது ஆர்.எஸ்எஸ்சின் திட்டம். இஸ்லாமியர்களை வம்பிழுக்க தான் இது போன்று தூண்டுதல்களை செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் பிள்ளைகள் கையில் லேப்டாப் கொடுக்கிறோம். கர்நாடகாவில் காவி துண்டையும், ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை கற்றுத் தருகின்றனர். இந்துக்களின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் தான். இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இந்து மதத்துக்கு எதிராக பேசவில்லை. பின்னர் ஏன் அவர்களை தாக்க சொல்கிறார்கள்.
இந்துவாக பிறந்த அம்பேத்கரும், பெரியாரும் ஏன் இந்து மதத்தை ஏன் குறை கூறினார்கள். ஒரே நாளில் அம்பேத்கரின் பேச்சை கேட்டு 10 லட்சம் பேர் பௌத்த மதத்தை தழுவினார்கள். இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நமது சகோதரர்கள் என்ற நிலையில், அவர்களை மதம் என கூறி மோதலை ஏற்படுத்துகின்றனர் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும்.
சாதி மத மோதலை, தூண்டி சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ், பாஜக தான். சமூக நீதியை காப்பதால் தான் அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ் தூக்கி எறிய முயல்கிறது. இந்திய அரசு தலித்துகளை புறக்கணிக்க முடியாது. 30 கோடி தலித் மக்களை மோடியின் பாட்டான் நினைத்தாலும், அமித்ஷா நினைத்தாலும் இவர்களை புறக்கணிக்க இயலாது.
அம்பேத்கரை தெய்வமாக ஏற்றுள்ளவர்கள் 30 கோடி தலித்துகள். அம்பேத்கருக்கு காலணி மாலை அணிவிக்கலாம். ஆனால் அம்பேத்கரை யாராலும் தவிர்க்க இயலாது. அம்பேத்கர் உலகளாவிய தலைவர். நாடாளுமன்றத்தில் தினந்தோறும் உச்சரிக்கப்படும் ஒரே தலைவர் அம்பேத்கர். ஏனென்றால் அவர் தொடாத துறை இல்லை. அம்பேத்கரை தலித் தலைவர் என நினைத்தால் அது அரசியல் அறியாமை, ராம்நாத் கோவிந்த் முன்பாக மோகன் பகவத் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். நாட்டின் முதல் குடிமகனை அவமானப்படுத்தினார்கள்.
தமிழிசை, பொன்னாரும் சனாதானத்தை புரிந்துகொள்ளவில்லை என்றால், முருகன் எப்படி புரிந்துகொள்வார். அவர்களுக்கு தேவை பதவி தான். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கிவிட்டு, ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டம் என்பார்கள். ஒரே தேசம் என்பது ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்காக தான். தற்போது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரித்து விட்டார்கள். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி் அரசியலமைப்பு சட்டம் என அறிவித்தாலும் அறிவிப்பர்.
அதிமுகவை ஸ்வாக பண்ணிருவார்கள் பாஜகவினர். தற்போதைய அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், விகேஎஸ் என மூன்றாக உள்ளது. அதிமுகவினர் அம்பேத்கர், பெரியாரை படிக்காதவர்கள். அம்மாவையும், எம்ஜிஆரையும் படித்தவர்கள். அம்பேத்கரை படிக்காத அதிமுகவினருக்கு எப்படி அரசியல் தெரியும். அம்பேத்கர் இருந்தால் மோடியை பாராட்டிருப்பார்கள் என இளையராஜாவின் கருத்திற்கு, அவரது கையெழுத்தை யாரோ போட்டிருப்பார்கள். நிச்சயம் அவர் அப்படி எழுதியிருக்கமாட்டார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அம்பேத்கரையும், அரசியலமைப்பு சட்டத்தையும் வெளிப்படையாக விமர்ச்சிக்க மாட்டார்கள். திரௌபதி முர்மு பல்வேறு பதவியில் இருந்தும் சொந்த கிராமத்தில் மின்சாரம் பெற்றுத்தர முடியாதவர். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அரசியல் ஒட்டுமொத்த தேசம் மற்றும் இந்துக்களுக்கு எதிரானது. பாஜக இருந்தால் ஆணவப்படுகொலை நடக்கும் ஆபத்தான பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.” என பேசினார்.