ஏழைத் தாயின் மகனுக்கும்.. ஏழை விவசாயிக்கும் செலவு செய்யும் பாஜக.. நிர்மலாவுக்கு செலவு செய்யாதா..? விசிக கேள்வி..!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 4:59 pm

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லை என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, பாஜக சார்பில் அடுத்தடுத்த கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளுக்கு போக எஞ்சிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இதன் வேட்பாளர்கள் அண்மையில் அறிவித்தனர். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனின் பெயர் இடம்பெறும் என்றும், தமிழகம், புதுச்சேரி அல்லது ஆந்திராவில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனின் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து, பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனம் கலைந்துள்ளார். அப்போது, பேசிய அவர், பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதாகவும், எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்ததாகவும் கூறினார்.

ஆனால், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்பதால், நான் போட்டியிடவில்லை என்று தலைமையிடம் தெரிவித்து விட்டதாகவும், அதனை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு களத்தை சந்திக்க பயம் என வி.சி.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழைத் தாயின் மகன் மோடிக்கும், ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பா.ஜ.க, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?வாக்கு வலிமையுள்ள சாதி இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?. களத்தை சந்திக்க பயம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!