திருமா கொந்தளித்தது சரியா…? அநீதிகளை கண்டிக்க தயக்கம் ஏன்..? அரசியல் களத்தில் சலசலப்பு..!

Author: Babu Lakshmanan
20 April 2023, 7:49 pm

விசிக தலைவர் திருமாவளவன் மிக அண்மையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கடந்த இரண்டு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு கோபத்தின் உச்சிக்கே சென்று கொந்தளித்த காட்சியை காண முடிந்தது.

அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பொது வெளியில் மிகவும் சாதுவாக காட்சியளிக்கும் திருமாவளவன் இப்படி ஆவேசப்பட்டதுதான் அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரையுமே திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதற்குக் காரணம் செய்தியாளர்கள் அவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பிய கிடுக்குப் பிடி கேள்விகள்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த சம்பவம் நடந்து 100 நாட்களுக்கும் மேல் ஆகிறதே? குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையே?… என்ற ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “நாட்கள் என்பது ஒரு பிரச்சினை இல்லை. சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம். விசாரணையில் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் இருக்கலாம். தமிழக அரசு பட்டியல் இன மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கை வயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றுகிற முயற்சியில் அரசு ஈடுபடவில்லை” என்றார்.

இன்னொரு செய்தியாளர் “ஒரு சின்ன கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து, நீண்ட நாட்களாக விசாரணை நடக்கிறதே?” என்ற கேள்வியை எழுப்ப அதற்கு திருமாவளவன் , “சின்ன கிராமம், பெரிய கிராமம் என்பதல்ல பிரச்சினை. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கட்டும். அது குறித்து முதலமைச்சரிடமும் பேசியுள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இதற்கு காலக்கெடு எதுவும் நாம் நிர்ணயிக்க முடியாது. இதில் ஏதாவது அவசரம் இருக்கிறதா? புலனாய்வில் அதிகாரிகளுக்கு இருக்கும் தேக்கத்திற்கான காரணம் இதுவரை நமக்கு தெரியவில்லை” என்றார்.

அப்போது ஒரு செய்தியாளர், “நீங்களும் தற்போது திமுககாரர் போலவே பேசுகிறீர்களே?” என்று அதிரடியாக கேள்வி எழுப்ப அதைக்கேட்டதும் அதிர்ந்த திருமாவளவன் ரொம்பவே சூடாகிப் போனார். உடனே தனது மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டே கேள்வி கேட்டவருக்கு மிரட்டல் விடுப்பதுபோல், “இந்த மாதிரி பேசுகிற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் நாகரிகம் இல்லாத பேச்சு. உங்களுக்கும் ஒரு நாகரிகம் வேண்டும். நாகரிகம் தவறி பேசாதீர்கள். உண்மைகளின் அடிப்படையில் கேள்வி கேளுங்கள். கற்பனையான உங்களுடைய கருத்தை திணிக்காதீர்கள். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கை கட்டி குனிந்து பேச வேண்டுமா? திமுகவை எதிர்த்து எங்களைப் போல போராட்டம் யாரும் நடத்தவில்லை. பட்டியல் இன மக்கள் பிரச்சினைகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்” என்று ஆவேசமாக குறிப்பிட்ட அவர் தனது கண்டனத்தை அந்த செய்தியாளருக்கு தெரிவித்து பேட்டியையும் அத்துடன் முடித்துக் கொண்டார்.

திருமாவளவனிடம் சென்னை செய்தியாளர்கள் இப்படி கிடுக்குபிடி கேள்விகளை எழுப்பியதற்கு பல காரணங்கள் உண்டு.

ஏனென்றால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பட்டியல் இன வகுப்பினருக்கு எங்காவது ஒரு சிறு பிரச்சினை என்றாலும் அதை பூதாகரமாக்கி மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பதுதான் விசிகவின் வழக்கமாக இருந்தது. தவிர பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியல் இனத்தவருக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அதற்காக முதல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவராகத்தான் இன்றுவரை திருமாவளவன் திகழ்ந்தும் வருகிறார்.

அதேநேரம் காங்கிரசோ அதன் கூட்டணி கட்சிகளோ அல்லது வேறு கட்சிகளோ ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியல் இன மக்களுக்கு வன்கொடுமை நடந்தால் விசிக முழக்கமிடுவது மிக மிக அபூர்வம் என்பது வெளிப்படையாக அனைவரும் தெரிந்த ஒன்று.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் விசிகவுக்கு பெரும் சோதனையாக அமைந்தும் விட்டது.

2021-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மோரூர் என்னும் கிராமத்தில் விசிக கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் போலீசின் தடையையும் மீறி கொடிக்கம்பத்தை நடுவதற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், அந்த கிராம மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தும் சூழலும் ஏற்பட்டது. இதில் விசிகவினர் 9 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசாரில் சிலரும் பலத்த காயமடைந்தனர்.

இதை உடனடியாக கண்டித்த திருமாவளவன் முதல் கட்டமாக சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மூன்று நகரங்களிலும் பின்னர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தார். இதைதொடர்ந்து,
காவல் துறையை தனது முழு காட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவனை அழைத்து பேசினார். அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அத்தனை போராட்டங்களையும் ரத்து செய்துவிட்டு அவர் கப்சிப் ஆகிவிட்டார்.

இதனையடுத்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி வேங்கை வயல் பிரச்சினை வெடித்தது. உலக வரலாற்றில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பட்டியல் இன சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடூர சம்பவமாக இது வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதனால் கொதிப்படைந்த விசிக முதற்கட்டமாக புதுக்கோட்டை நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பட்டியல் இனத்தவருக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் விதமாக மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும், சிறிய நகரங்களிலும் எழுச்சி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தவிர கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் நடந்த நிகழ்வுகள் குறித்து நேரடியாகவும் திருமாவளவன் கேட்டறிந்தார். அப்போது பட்டியல் இன மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதை வன்மையாக கண்டித்த அவர் வேங்கைவயல் பிரச்சினையில் முதலமைச்சர் அக்கறையோடு செயல்பட்டாலும் கூட அதில் முன்னேற்றம் இல்லாதது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது வேதனை தருவதாக உள்ளது” என்று மட்டும் குறிப்பிட்டார்.

பின்னர் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசவும் செய்தார். அதன் பிறகு, தான் ஏற்கனவே அறிவித்த போராட்டங்கள் பற்றி திருமாவளவன் வாய் திறக்கவே இல்லை.

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயர் சாதியினர் விதித்த தடையை மீறி சாமி தரிசனம் செய்வதற்காக நுழைந்தார். அவரை அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளி போல் நிறுத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் அப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவும் செய்தது. ஆனால் இதை திருமாவளவன் உடனடியாக கண்டிக்கவில்லை. மாறாக மூன்று நாட்கள் கழித்து திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவருடைய கட்சி பதவியை திமுக தலைமை பறித்த பிறகே வாய் திறந்தார்.

அரசியல் பார்வையாளர்களோ திருமாவளவனின் அரசியல் செயல்பாடுகளை வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமாவளவன் தன்னை பட்டியல் இன சமூக மக்களின் ஏகோபித்த தென்னிந்திய தலைவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதற்கான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் வெளிப்படை. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பகுஜன் சமாஜ் தலைவராக உள்ள மாயாவதியை இதில் பின்னுக்குத் தள்ளும் எண்ணமும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது.

அதனால்தான் இப்போதெல்லாம் ஹைதராபாத், குண்டூர், பெங்களூரு, கோழிக்கோடு, மும்பை என பல நகரங்களில் அவரை அடிக்கடி பார்க்க முடிகிறது. பட்டியல் இன மக்களிடம் தனித்துவம் மிகுந்த தலைவராக உயர வேண்டும் என்று அவர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அது அவர் சார்ந்த சமூகத்தினரின் விருப்பத்தை
பொறுத்தது.

ஆனால் திமுக தனது கூட்டணி கட்சி என்பதாலும், மாநிலத்தை ஆளும் அதிகாரம் அதன் வசம் இருப்பதாலும் திமுக ஆட்சியில் பட்டியல் இன வகுப்பினருக்கு எதிராக நடக்கும் வன் கொடுமைகளை கண்டும் காணாமலும், தட்டிக் கேட்காமலும் போனால் அவர் மீதான நம்பகத்தன்மை வெகுவாக குறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கோபம் கொப்பளிக்க திருமாவளவன் பேசுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்க்க முடியவில்லை. வேங்கை வயல் விவகாரம் மட்டுமல்ல பட்டியல் இனத்தவருக்கு எதிரான அநீதிகளை கண்டித்து அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தியே வருகின்றன. பொது வெளியிலும் அது தொடர்பான விமர்சனங்களை வைக்கவும் செய்கின்றன. ஆனால் பெரும்பாலான அச்சு, காட்சி ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவது இல்லை. அதனால்தான் அது வெளியே தெரியாமல் போய்விடுகிறது.

அதேநேரம் திருமாவளவனோ கடந்த 25 வருடங்களாக பட்டியல் இன மக்களின் வாழ்வுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு வருகிறேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். ஆனாலும் திமுக அரசு மீது எந்த விமர்சனத்தையும் அவர் கடுமையாக வைப்பதில்லை என்பதுதான் நிஜம். தோழமையின் சுட்டுதல் என்ற அளவிற்கே அவருடைய கருத்துகள் உள்ளன.

உண்மையிலேயே எந்த ஆட்சியில் பட்டியல் இன சமூகத்தினருக்கு அநீதி நடந்தாலும் அதை கண்டிக்க வேண்டியது திருமாவளவன் போன்றவர்களுக்கு அவசியம் தேவை. இல்லையென்றால் ஓரிரு எம்பி, எம்எல்ஏ சீட்டுகளுக்காக கட்சி நடத்தும் சாதாரணமானதொரு அரசியல் கட்சி தலைவராகத்தான் அவர் மக்களால் பார்க்கப்படுவார்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…