தமிழக அரசு கொஞ்சம் யோசிக்கனும்.. க்யூ பிராஞ்ச் போல தனி உளவுப்படை அமைத்திடுக : திருமாவளவனின் ஐடியா!!
Author: Babu Lakshmanan20 January 2023, 2:53 pm
சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உளவுப்படை தேவைப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கவயல் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் பேசிய போது, இந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது. அத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம் என்று உறுதியளித்திருக்கிறார்.
முதலாவதாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆணையிடப்பட்ட நிலையில். அந்த குழுவின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. உடனடியாக முதல்வர் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி இருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தீவிரவாதத்தை கண்காணிப்பதற்கு கியூ பிரான்ச் இருக்கிறதோ, அது போல சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. தமிழக அரசு இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இரட்டைக்குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. அவற்றை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணை ஆணையம் தமிழக அரசு அமைக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு வெளிச்சத்திற்கு வந்தாலும் கூட, பல இடங்களில் இது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதை முற்றாக ஒழிப்பதற்கு முதல்வர் காவல் துறைக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவை பற்றி ஒரு ஆய்வை நடத்துவதற்கு அறிக்கை அளிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பது குறித்த கேள்விக்கு?, தமிழக அமைச்சர் சட்டமன்றத்தில் அது ராமர் பாலம் இல்லை என்று பேசினார். மீண்டும் அவர்கள் ராமர் பாலம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அங்கு சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகிறது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்று கருதுபவர்கள் ராமர் பாலம் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி;
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி, காங்கிரஸ் வென்ற தொகுதி, மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் இடமளித்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும். அதற்கு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக பணியாற்றும்.
அதிமுக இன்றைக்கு சின்னத்தை இழந்திருக்கிறது. ஒரே அதிமுக இல்லை, யார் நின்றாலும்,அந்த தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
தாட்கோ கடன் தொடர்பான கேள்விக்கு?, தமிழ்நாடு முழுவதும் அந்த பிரச்சினை இருக்கிறது. தாட்கோ மானியத் தொகை வழங்குவதற்கு முன் வந்தாலும், வங்கிகள் அதற்கு தயாராக இல்லை, வங்கியும் ஒத்துழைத்தால் தான் தாட்கோ கடன் உதவியை ஆதிதிராவிட பொது மக்கள் பயன்பெற முடியும். தேசிய வங்கிகள் பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
ஈஷா யோகா மையம் பெண் இறப்பு குறித்த கேள்வி?, ஈஷா யோகா பயிற்சிக்கு சென்று திரும்பும் அந்த பெண்மணியின் இழப்புக்கு யார் காரணம் யார்? ஏன் நடந்தது? என்ன பின்னணி? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அது குறித்து விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
சேது சமுத்திர திட்டம்
சேதுக்கால்வாய் திட்டம் சுற்றுச்சூழல் பார்வையில் கூடாது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மீனவர்களின் பாதிப்பு என்ன என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும்கூட இந்துமாக்கடலில் நிலவுகிற சர்வதேச அரசியலைக் கருத்தில் கொண்டு சேதுக் கால்வாய்த் திட்டத்தில் தேவையை தமிழ்நாடு அரசு உணர்கிறது. மக்கள் குறைகளையும் கவனிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அவர்களின் விருப்பத்தை அறிந்து அதனடிப்படையில் இதுபோன்ற திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேலும், மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை அறிக்கை சம்பந்தமாக?, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்து சில மாதங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை மீதான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக நான் நம்புகிறேன். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேட்டு கொண்டார்.
0
0