‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்ற வார்த்தை தான் பாஜகவின் ஆயுதம் ; பொய்யை உண்மையாக்கும் நிகழ்வு தான் அயோத்தி ராமர் கோவில் ; திருமாவளவன் விமர்சனம்!!
Author: Babu Lakshmanan23 January 2024, 4:20 pm
10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாடெங்கும் மதத்தின் பெயராலும் வன்முறையின் பெயராலும் கொடுமைகள் தலைவிரித்தாடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் சமத்துவ சுடர் தொடர் ஓட்டத்தினை விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட கட்சியினர் பேரணியாக மாநாட்டு சுடரினை திருச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்கு ஏந்தி சென்றனர்.
பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன், வெல்லும் சனநாயகம் மாநாடு சரித்திரம் படைக்கும் மாநாடாக மாறும்.ஜனநாயக விழுமியங்களை காக்க வேண்டிய நெருக்கடி நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாடெங்கும் மதத்தின் பெயராலும் வன்முறையின் பெயராலும் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.
வேலைவாய்ப்பின்மை நாட்டின் முதல் பிரச்சனையாக மாறி இருக்கின்றது. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீதியில் திரிகின்றனர். ஆனவக்கொலைகள் பெருகிஉள்ளன. பொருளாதாரம் அகால பாதாளத்தில் சரிந்து உள்ளது. அயோத்தியில் ராமர் விழாவை நடத்தி 10 ஆண்டுகளில் ஏற்பட்ட அவலத்தை மறைக்க நினைக்கிறார்கள்.
பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றக் கூடியதற்கு சான்று தான் அயோத்தியில் நேற்று நடந்ததுள்ளது. மக்களின் போர் குணங்களை ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையின் மூலம் மழுங்கடிக்கிறார்கள் பாஜகவினர்.
மக்கள் தங்களின் உரிமைகளான கல்வி, சமத்துவம், பாதுகாப்பு விடுதலை, இட ஒதுக்ககீடு போன்றவற்றை கேட்பதற்கு பதிலாக ஜெய் ஸ்ரீ ராம் என்று கேட்க வைத்துள்ளார்கள்.
மோடியின் ஜெய் ஸ்ரீராம் வார்த்தை உழைக்கும் அப்பாவி இந்து மக்களை அடக்குமுறைக்குள்ளக்கியுள்ளது. அப்பாவி சூத்திர இந்துக்கள் அடிமைபடுத்தபட்டு வருகின்றனர்.தொடர்ந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக மாண்புகள் சிதைக்கபட்டுவிடும். பார்ப்பனிய தர்மத்தை பாதுகாப்பதுதான் பாஜக கூறும் புதிய பாரதம், ராம ராஜ்யம், என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :- வெல்லும் சனாயகம் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவிருக்கிறார். இந்த மாநாடு , நாட்டை சூழ்ந்துள்ள பேர் ஆபத்திலிருந்து மக்களையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க கூடிய மாநாடு. பணமதிப்பு வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ளது ஜெய் ஶ்ரீ ராம். ஆளுநர் ரவியின் குரல் ஒட்டுமொத்த RSSஇன் குரல். ஆளுநர் ரவி இல்லை. அவர் RSS ரவி. வருணாசர தர்மமான ராம ராஜ்யத்தை நிலைநாட்ட பாஜகவுடன் ஆளுநரும் இணைந்து உள்ளார்.
இந்து மக்களே விழித்துக் கொள்ளுங்கள் பாஜகவின் இறைக்கு காணிக்கையாகி விடாதீர்கள். பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் அச்சமுடன் இருக்கிறார்கள் என தவறாக திட்டமிட்டு ஆளுநர் நேற்று பேசினார். விசிக மாநாட்டுக்கு பிறகு தேர்தல் குழு அமைத்து கூட்டணியில் தொகுதி குறித்து திமுகவுடன் பேச உள்ளோம், என அவர் தெரிவித்தார்.