இடைத்தேர்தல் சமயத்தில் இப்படியா..? திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா…? திகைப்பில் திமுக, காங்கிரஸ்…?

Author: Babu Lakshmanan
25 February 2023, 5:15 pm
Quick Share

விசிக

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் களம் இறங்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமாவளவன் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் பட்டியல் இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் ஒரே தென் மாநில கட்சி என்பதை நிலைநாட்டும் விதமாக விசிகவின் கிளைகளை விரித்து வருகிறார்.

vck - updatenews360

தேசிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விரிவுபடுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மறைந்த தலைவர் கன்சிராம் அளவிற்கு உயர்ந்த நிலையை எட்டவேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். என்றாலும் அதற்கு பெரும் தடையாக இருப்பது மொழி பிரச்சனைதான்.

வடமாநிலங்களில் விசிகவை வளர்த்தெடுக்கவேண்டும் என்றால் பிரச்சாரம் செய்வதற்கு இந்தியில் நன்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும் திருமாவளவன் இந்தியை ஆர்வமுடன் கற்றுக் கொள்வாரா? என்பது கேள்விக்குறிதான்.

ஒருவேளை அவர் இந்தியில் எழுதவோ, பேசவோ கற்றுக் கொண்டு விட்டால் அது தமிழகத்தில் அவருடைய பெயரை ரொம்பவே டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால் தற்போதைக்கு தென் மாநிலங்களின் அரசியலில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

BRS

இந்த நிலையில்தான் தெலுங்கானாவில் அம் மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஒரு பரபரப்பு செய்தி சில ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்த சந்திரசேகர ராவ் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி பாரத ராஷ்டிர சமிதி என்ற புதிய பெயருடன் அதை தேசிய கட்சியாக மாற்றினார். இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தபோது அதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட முக்கிய தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர்.

அப்போது போராட்டக் குணத்தை வெளிப்படுத்தும் சிறந்த தலைவர் என்று அவருக்கு பிற கட்சித் தலைவர்களின் முன்னிலையில் சந்திரசேகர ராவ் புகழாரமும் சூட்டினார்.

தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சி என்று காங்கிரசை கூறினாலும் கூட, தற்போது அங்கு வலுவான எதிர்க்கட்சியாக பாஜகதான் உள்ளது. அதனால் ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக தங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சந்திரசேகர ராவ் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

இதனால் மாநிலத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான 18 தொகுதிகளையும் தங்கள் வசம் கொண்டு வந்து விடலாம் என்று பாரத ராஷ்டிர சமிதி கணக்கு போடுகிறது.

தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு உள்ள பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் பாஜகவுக்கு சென்று விடாமல் தடுக்கவே விசிகவை தங்களது கூட்டணிக்குள் சந்திரசேகர ராவ் கொண்டு வந்து விட்டார் என்கிறார்கள். விசிகவுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகளை பாரத ராஷ்டிர சமிதி ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குழப்பம்

இதுதான் தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது வரை திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது. அப்படி இருக்கும்போது காங்கிரஸுக்கு எதிரான அணியில் திருமாவளவன் எப்படி கூட்டணி வைக்கலாம் என்று காங்கிரசார் கொந்தளிக்கின்றனர். விசிகவின் இந்த முரண்பட்ட போக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலையையும்,பீதியையும் காங்கிரஸுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

CM Stalin - Updatenews360

ஆனால் அறிவாலயமோ இதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. ஏனென்றால் சமீப காலமாகவே திமுக கூட்டணியில் பட்டும் படாமலும்தான் திருமாவளவன் இருக்கிறார். தன் விருப்பம் போல் அவர் நடந்து கொள்கிறார். மனதில் பட்டதையும் பேசுகிறார்.

இதற்கு முக்கிய காரணம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்து விவகாரத்தில் இதுவரை திமுக அரசு யாரையும் கைது செய்யவில்லையே? என்ற கடும் கோபமாக கூட இருக்கலாம். சமூக நீதி பற்றி கடந்த 70 ஆண்டுகளாக பேசி வரும் திமுக ஆட்சியில் இப்படியொரு கொடுமை நடந்ததை அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்பதும் நிஜம்!

மேலும் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக கூட்டணி கட்சிகளில் யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் திருமாவளவன் மட்டும் வரவேற்றதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதே உண்மை. இதற்குக் காரணம் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணிக்கு விசிக தாவலாம் என்று அறிவாலயம் சந்தேகப்படுவதுதான்.

இங்கேயே அவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளபோது, தெலுங்கானா மாநிலத்தில் திருமாவளவன் யாருடன் கூட்டணி அமைத்தால் நமக்கு என்ன?… என்ற விரக்தி நிலை திமுக தலைமைக்கு வந்திருக்கவும் வாய்ப்புண்டு.

கூட்டணியில் குழப்பம்

“தெலுங்கானாவில் மட்டுமின்றி மே மாதம் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலும், 2024ல் ஆந்திர மாநில தேர்தலிலும் விசிக போட்டியிடுவது உறுதி” என்று அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.

“கர்நாடகாவில் பட்டியலின மக்களுக்கான தொகுதிகள் 36 உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஏற்கனவே திருமாவளவன் நியமித்து விட்டார். மாநிலத்தில் பாஜக- காங்கிரஸ் இடையேதான் ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டியே நடக்கிறது.

தெலுங்கானாவில் காங்கிரசுக்கு எதிரான கூட்டணியில் விசிக இருப்பதால் கர்நாடக காங்கிரஸ் திருமாவளவனை கண்டு கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அதேநேரம் பட்டியலின மக்களின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதில் விசிக உறுதியாக இருப்பது தெரிகிறது.

அதனால் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவே விசிக விரும்பும்.
குமாரசாமி கட்சியும் விசிகவுக்கு அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் அந்த அமைச்சரவையில் விசிகவுக்கும் இடம் கேட்டு பெற முடியும் என்று திருமாவளவன் நம்புகிறார்.

Thirumavalavan - stalin - updatenews360

ஆந்திராவைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மாநில தேர்தல் நடக்கும் போது அங்குள்ள 175 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்களை நிச்சயம் நிறுத்தும். ஏனென்றால் அந்த மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அளவிற்கு பாஜக வலுவாக இல்லை என்று திருமாவளவன் கருதுகிறார். அதனால் ஆந்திராவில் யார் ஆட்சி அமைத்தாலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று விசிக நினைப்பதால் அம் மாநிலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி துணிந்து போட்டியிடும் நிலைதான் உள்ளது.

இப்படி தென் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸுக்கு எதிரான கூட்டணியில் விசிக இணைவதை தமிழக காங்கிரசும் டெல்லி காங்கிரஸ் மேலிடமும் விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். எனவே நமது கூட்டணியில் விசிக நீடிக்க கூடாது என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு சோனியா அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதனால்தான் பாமகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தலைமை திரை மறைவில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விசிக வெளியேறினால் அதன் வாக்கு இழப்பை பாமக சரிக்கட்டி விடும் என்றும் நம்புகிறது.

ஆனால் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் கூட ஒரே அணியில் இருப்பதை காண முடியும். நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கிறது. ஆனால் அங்கு பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
இரு கட்சிகளும் முட்டி மோதிக் கொள்ளவும் செய்கின்றன.

தமிழகத்திலோ இந்த இரு கட்சிகளும் திமுக கூட்டணியில் ஒன்றாக உள்ளன. இப்படி திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்களிலும் காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. எனவே காங்கிரசுக்கு எதிராக விசிக போட்டியிடுவதை பெரிய விஷயமாகவும் எடுத்துக்கொள்ளவும் தோன்றவில்லை. தேர்தல் நடந்து முடிந்து காங்கிரசுக்கு பெரும் தோல்வி கிடைத்தால் மட்டுமே விசிக பற்றி பரபரப்பாக பேசப்படும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவும் உண்மையாகவே தென்படுகிறது!

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 395

    0

    0