3 பேர் வசிக்கும் வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் மின்கட்டணமா…? அதிர்ந்து போன வீட்டு உரிமையாளர்.. வேலூரில் ‘ஷாக்’ சம்பவம்…!!
Author: Babu Lakshmanan5 May 2022, 10:44 pm
மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு லட்சத்தி 60 ஆயிரத்தி 642 ரூபாய் வந்த மின் கட்டணத்தால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் முத்து மண்டபம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு, டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் 24-ம் நம்பர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கூலிதொழிலாளி ராணி அம்மாள். இவருடைய வீட்டில் மொத்தம் 3 பேர் மட்டுமே வசித்து வரும் சூழலில், வழக்கமாக 65 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துள்ளது. மேலும் கடந்த முறை 95 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மாதத்துக்கான மின் அளவீடு நேற்று செய்யப்பட்டுள்ளது. அப்போது, இந்த மாதத்துக்கான கட்டணம் ஒரு லட்சத்தி 60 ஆயிரத்தி 642 ரூபாய் வந்துள்ளதாக மின் அளவீட்டாளர் அளவீடு நோட்டில் எழுதியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் இது குறித்து மின் கணக்கீட்டாளரிடம் கேட்டதற்கு ‘இந்த அளவுக்கு மீட்டர் ஓடியிருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்’
பின்னர் இது தொடர்பாக நேற்றே மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் ராணி அம்மள் குடும்பத்தினர். இந்த நிலையில், புகாரையடுத்து இன்று சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் ராணி அம்மாள் வீட்டு மீட்டரை ஆய்வு செய்தனர்.
இது குறித்து மின் வாரிய துறை அதிகாரிகள் கூறியதாவது :- ராணி அம்மாள் மீட்டரில் பழைய அளவு 1756-ல் இருந்து திடீரென 26420-க்கு மின் அளவு ஜாம்ப் ஆகியுள்ளது (ஃரீடிங்). இதன் காரணமாகவே மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் அளவு மாறியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் ராணி அம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து புதிய மீட்டரை பொறுத்தியுள்ளோம்.
மேலும் பழைய மீட்டரை எடுத்து சென்று மின் அளவு மாறியதற்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என கூறினர்.
அதேபோல் இந்த மாதம் ராணி அம்மாள் குடும்பத்தினர் எவ்வளவு மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பது குறித்து உயர் பழைய மீட்டரை ஆய்வு செய்த பிறகும், உயர் அதிகாரிகளின் ஆலோசனை படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.