முதலமைச்சர் ஸ்டாலினின் சிந்தனை எல்லாம் பாஜக மீது தான்… எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிவோம் : வேலூர் இப்ராஹிம் ஆவேசம்!!
Author: Babu Lakshmanan24 February 2023, 1:31 pm
புதுக்கோட்டை ; கோவையில் நடந்ததை கோட்டைப்பட்டினம் வரை நடப்பதற்கு அரசியல் லாபத்திற்காக தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக பாஜக சார்பில் அக்கட்சியில் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் செய்துள்ளது என்பது குறித்து மக்களிடையே எடுத்துக் கூற வேலூர் இப்ராஹிம் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அச்சுறுத்தல்கள் உள்ளதால் வேலூர் இப்ராஹிம் செல்வதற்கு காவல்துறை தடை விதித்து, அவரை இரண்டு முறை தற்காலிகமாக கைது செய்து விடுதலை செய்துள்ளது. நேற்று அது போன்று கோட்டைப்பட்டினம் பகுதியில் வேலூர் இப்ராகிம் செல்லும்போது, அவரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவரை மீண்டும் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது. இதன் பின்னர் விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் என்னை தாக்க திட்டமிடப்பட்டுள்ளவர்களை கைது செய்யாமல், என்னை கைது செய்து அங்கு செல்ல விடாமல் தடுப்பது ஜனநாயக முறைப்படி தவறாகும். காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளித்து மத்திய அரசு சிறுபான்மை பிரிவு மக்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களை அறிவித்துள்ளது, செயல்படுத்தி உள்ளது என்பது குறித்து விளக்க எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், “தமிழக முதல்வர் உத்தரவின் பேரிலேயே தன்னை சிறுபான்மை மக்களிடையே பேசுவதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளிப்பது கிடையாது. குறிப்பாக, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியாக இருப்பதால், தன்னை அங்கு செல்ல விடாமல் காவல்துறை கைது செய்கிறது. இது கண்டனத்துக்குரியது. காவல்துறை தடுத்தாலும் அதன் தடையை மீறி, நாங்கள் அங்கு சென்று மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்து கூறுவோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தலைதூக்கி விட்டது. இதனை தடுப்பதற்கு தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாஜக சிறுபான்மை பிரிவு மக்களை சந்திக்க விடாமல் தடுக்கிறார். தமிழகம் அமைதி பூங்கா என்பது மாறி தற்போது வெடிகுண்டு கலாச்சாரம், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கோயமுத்தூரில் நடந்ததை கோட்டைப்பட்டினம் வரை கொண்டு செல்வதற்கு அரசியல் லாபத்திற்காக தமிழக முதல்வர் மறைமுகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,” என கூறியுள்ளார்.