யாருய்யா அந்த கான்ட்ராக்டர்…? பைக்கையும் சேர்த்து வைத்து ரோடு போட்ட அவலம்… கதிகலங்கிப் போன வேலூர் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
28 June 2022, 5:15 pm

வேலூர் : தெருவில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சிமெண்ட் சாலை போட்ட மாநகராட்சி நிர்வாகத்தின் செயலால் வேலூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்ட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

அதோடு, தெருவோரம் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், “இது என்னோட தம்பி வண்டி தான். நேற்று இரவு 11 மணிவரை கடையில் தான் இருந்தோம். அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. மாறாக இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.

இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது. முன் அறிவிப்பு கொடுத்திருந்தால் வண்டியை தெருவில் விட்டிருக்க மாட்டோம். அல்லது அவர்களே வண்டியை அப்புறப்படுத்தியாவது சாலை போட்டிருக்கலாம். ஒரு வேலை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல.

எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது. தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டனர்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?