யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது… சிறுமியின் உயிரிழப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பு ; அண்ணாமலை காட்டம்..!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 10:50 am

வேலூர் அருகே பாம்பு கடித்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, பாம்பு கடித்து, சரியான சாலை வசதி இல்லாததால், சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாததால் மரணமடைந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கையில், இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது?

சரியான சாலை வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியாததால் ஒரு குழந்தை இறப்பு என்பதைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு பத்து கிலோமீட்டர் தொலைவிற்குக் குழந்தையின் பெற்றோர் நடக்க நேர்ந்தது அதை விடக் கொடுமையானது. யாருக்குமே வரக்கூடாத துயரத்தின் உச்சம் இது.

ஏற்கனவே, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது போல, தற்போது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் பயன்படுத்தாமல் என்ன செய்கிறது தமிழக அரசு?

இந்தச் சிறு பெண் குழந்தையின் இறப்புக்கு, தமிழக அரசே முழு பொறுப்பு. தமிழக அரசின் புறக்கணிப்பால் இனியும் ஒரு இழப்பு ஏற்படாமல், தமிழகம் முழுவதும் சரியான சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கான சாலைகளை உடனே அமைக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் சாலைப் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும்
தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0