வேங்கை வயல் விவகாரம்… சாதியவாதி முத்திரை குத்த பாஜக முயற்சி ; திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
26 January 2023, 3:31 pm

வேங்கை வயல் விவகாரத்தில் எதிர்த்து போராடியவர்கள் மீது சாதியவாதி முத்திரையை குத்த பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அப்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- திரிபு வாதம் தான் சங்பரிவர்களின் முக்கிய அரசியல், நான் சொல்லும் கருத்து அரசியலை திரித்து பேசுவதை நடைமுறையாக பின்பற்றி வருகின்றனர். வேங்கை வயல் பிரச்சனை குறித்து இதுவரை பாஜக வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்ல கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்துக்கள் தான். ஆனால் அமைதி காக்கிறார்கள். அவர்கள் தான் சாதியவாதிகள், சனாதனவாதிகள். இதனை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சாதியவாதி என்ற முத்திரை குத்துவது திருபுவாத முயற்சி.

இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது என்று சொன்னால் எல்லோரும் நகைப்பார்கள், எட்டு ஆண்டுகளில் மோடி தலைமையில் எவ்வளவு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது என்று அனைவரும் அறிவார்கள். பணமதிப்பு வீழ்ச்சி அகல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி இருக்கிறது என்று சொல்வது அண்ட புளுகு ஆகாசப் புளுகு.

மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினார். அவரது உரை வன்முறைக்கு எதிராக இருந்தது என்று படம் பிடித்து காட்டி இருக்கிறது பிபிசி. உண்மை அறியும் குழு
தரவுகளைத் திரட்டி ஆவணப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. உடனே அதை யாரும் பார்க்காதபடி தடை செய்வது இணையத்தில் முடக்குவது கருத்துரிமையை பறிக்கின்ற அடாவடி செயல். பொதுமக்கள் பார்க்காமல் தடுப்பது கண்டனத்துக்குரியது.

வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்தி இருக்கிறோம். சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு மாத காலம் ஆகியும் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தமது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு இதில் உறுதியாக இருந்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய யாரும் வேங்கை வயல் பற்றி பேசவில்லை எந்த நோக்கத்திற்காக யாருக்கு அச்சப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதாபிமானம் என்கிற பார்வை இருக்கிறதா இல்லையா என்று ஐயப்ப படக்கூடிய வகையில் இருக்கிறது.

பட்டியல் சமூகத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த் பழங்குடி சமூகத்தை சார்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை, ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்காணிக்க இந்திய ஒன்றிய அரசுக்கு பொறுப்பு இருக்கிறது.

இந்தியா முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 10 சதவிகிதம் பேர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடான ஒன்று, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வன்கொடுமைகளை தடுக்க முடியும் என்று வேண்டுகோள் விடுகிறோம்.நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யார் காரணம் என்பது பிரச்சனை அல்ல, குடிநீரில் மனித கழிவை கலந்தவர்கள் யார் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும்.

புதிய குடிநீர் தொட்டியை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம் புதிதாக குடிநீர் தொட்டியை கட்டக் கூடாது, பொது குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை பகிர்ந்து அளிக்க வேண்டும், என தெரிவித்தார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!