மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகர் காலமானார்… நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நிகழ்ந்த மேலும் ஒரு சோகம்… அதிர்ச்சியில் திரையுலகம்!!
Author: Babu Lakshmanan15 November 2022, 10:28 am
ஐதராபாத் ; மாரடைப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூத்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மூச்சு விடுவதில் கிருஷ்ணாவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறி, குடும்ப உறுப்பினர்கள் அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்து சிகிச்சை அளித்து பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
1942 ஆம் ஆண்டு மே 31ம் தேதி பிறந்த கிருஷ்ணா 350க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2007ஆம் ஆண்டு ரசிகர்கள் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தனர். 2009 ஆம் ஆண்டு கிருஷ்ணாவுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் கிருஷ்ணா. கடந்த 1997 ஆம் ஆண்டு அவருக்கு லைஃப் டைம் பில்ம் பேர் அவார்ட் வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. முதலில் இந்திரா தேவி என்பவரை மணந்த கிருஷ்ணா, அதன் பின் நடிகை விஜய நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேருமே மரணம் அடைந்து விட்டனர். அவருக்கு நடிகர் மகேஷ்பாபு உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணாவின் மறைவிற்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று தெலுங்கு திரையுலகிற்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்க்கு ஈடு செய்ய இயலாத இழப்பு என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அனுதாப செய்தியில் குறிப்பிட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி மரணமடைந்த நிலையில், இருமாதங்களுக்குள் அவரது தந்தையும் உயிரிழந்திருப்பது அவரை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.