மார்கரெட் ஆல்வாவுக்கு அல்வா கொடுக்கிறதா, திமுக…? முதலமைச்சர் ஸ்டாலினின் மௌனத்தால் பரிதவிக்கும் சோனியா..!!!
Author: Babu Lakshmanan28 July 2022, 8:06 pm
தற்போது நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி வரும் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜெக்தீப் தன்கர் போட்டியிடுகிறார். 71 வயதாகும் இவருடைய பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம்.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் 80 வயது மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் பிறந்தவர். கோவா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத் என 4 மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றியவர். ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் ஆகியோரின் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்தது போன்ற விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இதில் இல்லை என்பது உண்மைதான்.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் மிகுந்த ஆர்வம் காட்டிய மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் அப்படியே ஒதுங்கிக் கொண்டு விட்டதுதான்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 35 எம்பிக்களை கொண்டுள்ள எங்களை கலந்தாலோசிக்காமல் எதிர்க் கட்சிகளால் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அவை ஆலோசனையில் இருந்தன. ஆனால் எங்கள் சம்மதமின்றி பொது வேட்பாளர் பெயர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதனால்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் விலகியே இருக்கும். இந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெக்தீப் தன்கரையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது, எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவையும் ஆதரிக்காது” என்று அக்கட்சி அதிரடி காட்டி உள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள் கலகலத்துப் போய் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட முதல் பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்முவுக்கு எதிர் கட்சியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்களே நூற்றுக்கும் மேற்பட்டோர் ரகசிய வாக்களித்து இருந்தனர். தவிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவையும் பாஜக வேட்பாளரை வெளிப்படையாக ஆதரித்தன. இதனால் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முர்மு குடியரசு தலைவராகவும் ஆகி விட்டார்.
தான் நிறுத்திய யஷ்வந்த் சின்ஹாவிற்கு 17 எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் முழுமையாக கிடைக்கவில்லை என்ற விரக்தியில்தான் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட்டார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் உள்ளது.
எனினும் மம்தாவின் இந்த முடிவு குறித்து மார்கரெட் ஆல்வா கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசின் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்திற்கான நேரமும் அல்ல. தைரியம், தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான நேரம். தைரியத்தின் உருவகமான மம்தா எதிர்க்கட்சிகளுடன் நிற்பார் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சலசலப்பு ஒருவழியாக அடங்கிய நிலையில் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள திமுகவிடம் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் அவருக்காக காட்டிய அதே வேகத்தை தற்போது காட்டுகிறதா?… என்கிற சந்தேகம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரிடமும் இந்த எண்ணம் தென்படுகிறது என்கிறார்கள்.
கடந்த 19ம் தேதி, மார்கரெட் ஆல்வா குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட டெல்லியில் மனு தாக்கல் செய்தபோது அந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார். அதன் பிறகு 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. எனினும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினிடம் இருந்து இதுவரை வெளிப்படையான ஆதரவு தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்ற வருத்தம் காங்கிரசிடம் உள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் கவனமெல்லாம் தற்போது மகாபலிபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருப்பதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலோ 6-ம் தேதியே முடிவடைந்துவிடும். அதனால் மார்க்ரெட் ஆல்வாவின் வெற்றிக்காக திமுக எந்த வகையிலும் நேரடி பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதில்லை என்கின்றனர்.
இதனால்தான் செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மீது சமீபகாலமாக திமுக மென்மையான போக்கை அனுசரிக்க தொடங்கியிருப்பதாக ஒரு பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதனால்தான் தமிழகத்தில், மோடி வருகையின்போது கூட்டணிக் கட்சியினர் யாரும் go back modi என்னும் எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பக்கூடாது என்று திமுக சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது.
டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் வேறு சில காரணங்களையும் கூறுகின்றனர்.
“2019 முதல் தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதைத்தான் திமுக தலைவர்கள் பெருமையாக பேசி வருகின்றனர். ஆனால் பாஜக மேலிடத்தின் பார்வை இதில் மாறுபட்டதாக உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின்தான் அறிவித்தார். தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் கூட அப்போது மத்தியில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இரண்டாம் முறையாக மோடி பிரதமர் ஆனார். இது ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் தோல்வி.
அண்மையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை போட்டியிட வைத்ததில் திமுகவுக்கும் பெரும் பங்கு உண்டு. அவருக்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்சித் தலைவர்களிடம் போனில் பேசி ஆதரவும் கோரினார்.
சமூகநீதி பற்றி நிறைய பேசும் அவர், முதல்முறையாக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தியது பற்றியெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்று அனைத்து எதிர்க் கட்சித் தலைவர்களையும் வெட்கி தலைகுனிய வைத்தார். இதை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த இரண்டாவது பெரிய தோல்வியாக பாஜக தலைமை கருதுகிறது.
அதனால் அதேபோன்றதொரு நிலைமை தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் தனக்கு நேர்ந்த விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார், என்கின்றனர். அதாவது பாஜகவிடம் மூன்றாவது முறையாக தோல்வியை தழுவக் கூடாது என்று கவனமாக உள்ளாராம். இதனால்தான் மார்கரெட் ஆல்வாவுக்கு திமுக வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஏனென்றால் குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் பதிவான 763 எம்பி ஓட்டுகளில் 540 வாக்குகள் முர்முவுக்கும், 208 வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவிற்கும் கிடைத்து இருந்தது. அதனால் இந்த முறையும் அப்படி நடந்து விட்டால் என்ன செய்வது என்று திமுக நினைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். அவருக்கு வெளிப்படையாக வாக்கு சேகரித்தால் காவிரி நீர் பங்கீட்டிலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் தமிழகத்துடன் பிரச்சனை செய்து வரும் கர்நாடகாவை ஆதரிப்பதா? என்ற கேள்வியை தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பினால் அது திமுகவுக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தலாம் என்று கருதி யஷ்வந்த் சின்ஹாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததுபோல ஆல்வாவுக்கு ஸ்டாலின் சொல்லத் தயங்குகிறார் என்றும் பேசப்படுகிறது.
இதைத்தான் தங்களுக்கு திருநெல்வேலி அல்வா போல திமுக கொடுத்து விட்டது என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதை காங்கிரசாலும் வாய் திறந்து வெளியே சொல்ல முடியவில்லை என்பதுதான்.
ஏனென்றால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தயவைத்தான் காங்கிரஸ் நாட வேண்டி இருக்கிறது” என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
0
0