விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னமா..? கோரிக்கையும்… தேர்தல் ஆணையத்தின் பதிலும்…!!
Author: Babu Lakshmanan29 January 2022, 12:47 pm
சென்னை ; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தை கோரிய விஜய் மக்கள் இயக்கத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. மேயர், துணை மேயர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கிறது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளோடு, விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிட இருக்கிறது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.