2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி.. யார் அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்? காய் நகர்த்தும் செல்வப்பெருந்தகை!
Author: Udayachandran RadhaKrishnan18 பிப்ரவரி 2024, 10:30 காலை
2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி.. யார் அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்? காய் நகர்த்தும் செல்வப்பெருந்தகை!
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும் விஜயதாரணி குறித்து இப்படியான செய்திகள் வெளியாவது வழக்கம் என நாமும் விவரித்து எழுதி இருந்தோம்.
இந்த நிலையில் விஜயதாரணி தம்முடன் 2 எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு மோடி முன்னிலையில் பாஜகவில் இணையப் போகிறார் என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கக் கூடிய, அடுத்த முறை சீட் கிடைக்காது என நம்புகிற 2 எம்.எல்.ஏக்களைதான் விஜயதாரணி, பாஜகவுக்கு அழைத்துப் போகிறார் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இதற்காகவே தற்போது விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் போது பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பட்டும் படாமலுமே விஜயதாரணி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பதிலளித்த விஜயதாரணி, அதெல்லாம் எதுவும் இல்லைதான். இந்த மாதிரி செய்தி பெரியதாக பரவி இருக்கிறதுதான். அதேநேரத்தில் இதை உண்டு எனவும் சொல்லவில்லை. இல்லை எனவும் சொல்லவில்லை. ஆனால் வழக்கு ஒன்றுக்காகவே டெல்லியில் தங்கி இருக்கிறேன். இப்படியான செய்திகளை ஆச்சரியமாகவும் பார்த்து கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
2011 சட்டசபை தொகுதியில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஜயதாரணி போட்டியிட்டு 62,898 வாக்குகளைப் பெற்றார். அத்தேர்தலில் 43.69% வாக்குகளை விஜயதாரணி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு சிபிஎம் கட்சியின் லீமா ரோஸ் 39,109 வாக்குகள் (27.17%) மட்டுமே பெற்றிருந்தார். 2016 தேர்தலில் மீண்டும் களமிறங்கிய விஜயதாரணி 68,789 வாக்குகள் (42.73%) பெற்றார். பாஜகவின் தர்மராஜ் 35,646 (22.14%) வாக்குகளை பெற்றார். 2021 தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்ட விஜயதாரணி 87,473 வாக்குகளைப் (52.12%) பெற்றார். பாஜகவின் ஆர். ஜெயசீலன் 58,804 ( 35.04%) வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0