விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு.. நிர்வாகிகள் வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 11:46 am

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி, வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த சூழலில், இடையில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், த.வெ.க தலைவர் விஜய் கூறியபடி கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையில் கூறியதாவது ” கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள். தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று.

மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!