கீழே, மேலே செல்லும் ஓங்கூர் ஆற்றுப்பாலம்… வாகன ஓட்டிகளின் ஆபத்தான பயணம்.. உடனடியாக போக்குவரத்து நிறுத்தம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 1:34 pm

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 30 ஆண்டுகள் பழமையான பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, பெரும் அதிர்வு ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு ஆற்று பாலம் அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இந்நிலையில் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது பாலத்தின் முதல் 15 மீட்டர் வரை அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இருப்பினும், ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி, சென்னை சாலையில் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதனையடுத்து, சேதமடைந்துள்ள பாலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் இறுதி இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஒங்கூர் பகுதியில் ஒங்கூர் ஆற்றின் மீது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மூன்று இணைப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு இணைப்பிற்கும் நடுவில் ஸ்பிரிங், பேரிங், சீட்ஸ் போன்ற கருவிகள் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதனால் பாலத்தின் முதல் இணைப்பில் இருந்து விலகி உள்ளது. இதனால் பாலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளது. கட்டுமான முறைப்படி பாலம் நிலையாக உள்ளது. பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் காலநிலை முடிவு ஏற்பட்டதால் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

மேலும் இதை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் அலுவலர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார், என தெரிவித்தார்.

பெரிய விபத்து நடப்பதற்கு முன்பாக, பழைய பாலத்தின் நிலை குறித்து அறிந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…