விநாயகர் சதுர்த்திக்கு இந்து அறநிலையத்துறை வாழ்த்து : கருணாநிதியின் கருத்தை சுட்டிக்காட்டி திமுக எம்பி கடும் எதிர்ப்பு
Author: Babu Lakshmanan1 September 2022, 10:15 am
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முதல் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 முதல் 10 நாட்கள் வரை வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தி, பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
இந்தப் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
அதேவேளையில், முஸ்லீம், கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன இந்து சமய அறநிலையத்துறைக்கு திமுக எம்பி கண்டனம் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தெரிவித்து இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அந்த பதிவில், விநாயகர் படத்துடன், “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்,” என்றும் குறிப்பிடப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபுவின் பெயர்கள் ஹேஷ்டேக்கில் பதிவிடப்பட்டு இருந்தன.
இந்து சமய அறநிலையத்துறையின் இந்த செயலுக்கு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” என்ற கருணாநிதியின் கருத்தை குறிப்பிட்டு, “சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்.” என்று பதிவிட்டுள்ளார்.