அண்ணாமலை வருகைக்கு முன்பே.. இரவோடு இரவாக பாரத மாதா சிலையை அகற்றிய போலீசார் ; திமுகவினரின் சதி எனக் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan8 August 2023, 10:55 am
விருதுநகர்: அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் இரவோடு இரவாக அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக அலுவலகம். இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியின் நிறைவாக இக்கட்சி அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரதமாதா சிலையை நேற்று காலை நிறுவி பூர்வாங்க பணிகளை பணியாளர்கள் செய்து வந்தனர். மேலும், வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் , என் மக்கள் பாதயாத்திரை பயணமும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், விருதுநகர் தாசில்தார் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளீர்கள். எனவே, உடனடியாக இதை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்டதும் சிலையை அகற்ற முடியாது, எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது என பாஜக வினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக மாநில செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு, சிலை துணியால் மூடப்பட்டது. காவல் துறை உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் காவல்துறை குவிக்கப்பட்டு பாஜக அலுவலக கேட்டை காவல்த்துறையினர் நவீன இயந்திரம் கொண்டு அறுத்து திறந்து, சுமைதூக்கும் தொழிலாளர்களை கொண்டு பாரதமாதா சிலையை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, வாகனத்தில் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர்.
இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, அண்ணாமலை வருவதை தடுக்க திமுக தூண்டுதலின் பேரில் இவ்வாறு வருவாய் துறையும், காவல்துறையும் செயல்படுவதாகவும், தங்கள் தலைவரின் நடை பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது என்றும், இந்த அத்துமீறலுக்கு காவல்துறை பதில் சொல்லியே தீரவேண்டும் என்றும், பாரத மாதா சிலை வைக்கவே தமிழகத்தில் உரிமை இல்லாத நிலை ஆட்சியாளர்களின் அவலத்தை காட்டுவதாகவும் தெரிவித்தனர்.