பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் சாவு… பலியானோர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
Author: Babu Lakshmanan18 May 2023, 6:08 pm
விருதுநகர் ; சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சிவகாசியை அடுத்துள்ள ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பெரிய பட்டாசு ஆலையில், பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல தொழிலாளர்கள் இன்று பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருளாயி (48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ் (27) ஆகியோர் ஒரு அறையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீவிபத்த ஏற்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதில் 2 அறைகள் தரைமட்டமானது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்து, தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், குமரேசன்(30), சுந்தர்ராஜ் (27) உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே, வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் , பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகர் ஊராம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி பலியானோருக்கு ரூ.3 லட்சம் வழங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.