திமுக, அதிமுக, பாஜக போடும் ஓட்டு கணக்கு? கை கொடுக்குமா, காலை வாருமா?…

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 7:54 pm

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் திமுக,
அதிமுக, பாஜக தலைமையில் அமையும் கூட்டணி கட்சிகளிடையே கடுமையான மும் முனைப்போட்டி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சியும் சில தொகுதிகளில் ‘டஃப்’ ஃபைட் கொடுக்கலாம்.

அதிமுக கூட்டணி முறிவால் திமுகவில் சத்தம்!!

அதேநேரம் எந்தக் கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கின்றன என்பது உறுதியாக நிலையில் பிரதான கட்சிகள் போடும் ஓட்டு கணக்குகள் யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளன.

இதனால் கடைசி நேர திடீர் திருப்பங்களும் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகளும் உண்டு. திமுக கூட்டணியை பொறுத்தவரை இதுவரை அந்த கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் வெளியேறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனினும் விசிக,மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே லேசான சலசலப்பு சத்தம் கேட்பதை உணர முடிகிறது.

அதற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொண்டதை கூற முடியும். ஏனென்றால் இந்த இரு கட்சிகளுமே அதிமுகவின் அறிவிப்புக்கு உடனே வரவேற்பை தெரிவித்து திமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கின. இதை எப்படியும் சமாளித்து அமோக வெற்றி பெற்று விடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் போடும் ஓட்டு கணக்கு இதுதான்.

சாதாரண நகர டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு 36 மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு
ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவை பெரிதும் கை கொடுக்கும்.

இந்த நான்கு திட்டங்களிலுமே பெண்கள் நேரடியாக பணப்பயன் அடைகிறார்கள். அதனால் பதிவாகும் மொத்த வாக்காளர்களில் சரிபாதியாக உள்ள பெண்களில் 55 சதவீதம் பேர் ஓட்டு போட்டால் அதன் மூலமே சுமார் ஒரு கோடியே 70 லட்சம் வாக்குகளை பெற்றுவிட முடியும் என்று திமுக நம்புகிறது.

பொதுவாக பெண்களின் ஓட்டு திமுகவுக்கு அதிகமாக கிடைப்பதில்லை. அவர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கே செல்லும். அதனால் பெண்களை கவரும் வகையில் உள்ள இந்தத் திட்டங்கள் மூலம் அவர்களின் ஓட்டுகளை அறுவடை செய்துவிட முடியும் என்றும் கணக்கு போடுகிறது.

ஆனால் ஆண் வாக்காளர்களின் ஓட்டு பெரும்பாலான தேர்தல்களில் திமுகவிற்கே அதிக அளவில் சென்றுள்ளது. நாம் ஆட்சியில் இருப்பதால் இந்த முறையும் ஆண்களின் வாக்குகள் நமக்கே கிடைக்கும் என்று அறிவாலயம் கணக்கு போடுகிறது. என்றபோதிலும் ஆண் வாக்காளர்களின் ஓட்டு குறைந்த பட்சம் 30 சதவீதம் கிடைத்தால் கூட போதும் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்குகளை தேற்றி விடலாம்.
ஆண், பெண் வாக்காளர்களின் மொத்த ஓட்டுகளை கணக்கிட்டால் அது 2 கோடியே 70 லட்சத்தை கடந்து விடும். இதனால் தமிழகத்தில் உள்ள 39 எம்பி தொகுதிகளையும் அப்படியே அள்ளி விடலாம் என்று திமுக நினைக்கிறது.

2019 தேர்தலில் திமுக கூட்டணிக்கு 39 தொகுதிகளிலும் 2 கோடியே
23 லட்சம் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக அறிவித்திருப்பதால் தமிழகத்தில் உள்ள 40 லட்சம் சிறுபான்மையினரின் வாக்குகளில் குறைந்தபட்சம் 15 லட்சம் ஓட்டுகள் தங்களுக்கு வந்து சேரும். அதே போல மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்காத குடும்பத் தலைவிகள் ஒரு கோடி பேர் இருப்பதால் அவர்களின் வாக்குகளும் நமக்கு கிடைக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, கடுமையான சொத்து வரி, மின் கட்டண உயர்வு,
அத்தியாவசிய பொருட்களின் விலை 30% முதல் 40% வரை அதிகரிப்பு, இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், திமுகவினரின் அடாவடி நில அபகரிப்பு, அன்றாடம் நடக்கும் கொடூர படுகொலைகள் போன்றவை காரணமாக மக்களிடையே திமுக அரசு மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியால் பத்து சதவீத வாக்குகள், அதாவது
பதிவாகும் வாக்குகளில் சுமார் 45 லட்சம் ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்காமல் போகும் நிலை உருவாகி இருக்கிறது. அதில் குறைந்தபட்சம் 25 முதல் 30 லட்சம் ஓட்டு நமக்கு நிச்சயம் விழும் என்று அதிமுக நம்புகிறது.

மேலும் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் தலைவர்கள் என்னதான் திமுகவுடன் ஒட்டி உறவாடி மிக நெருக்கமாக இருந்தாலும் கூட முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பட்டியல் இன சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட ஏராளமான தாக்குதல் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேரடியாக பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க விரும்ப மாட்டார்கள். இதன் மூலம் இந்த மூன்று கட்சிகளுக்கும் உள்ள ஐந்து சதவீத வாக்குகளில் இரண்டு சதவீதம் நமக்கு வருவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என்றும் அதிமுக தலைமை கருதுகிறது.

இதனால் 2019 தேர்தலில் 18.5 சதவீத ஓட்டுகளைப் பெற்ற அதிமுகவால் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதை 30 சதவீதம் வரை கொண்டு சென்று விடவும் முடியும்.

பலத்த மும்முனைப் போட்டியில் 28 சதவீத வாக்குகள் கிடைத்தாலே தமிழகத்தில் குறைந்தது, 14 முதல் 16 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றவிடலாம். இதை மனதில் வைத்துதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செயல்படுவது போல தெரிகிறது.

தமிழக பாஜகவை பொறுத்தவரை அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பின்பு கடந்த இரண்டு வருடங்களில் அவர் காட்டும் அதிரடி அரசியலால் பாஜக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் இளைஞர்களிடம் மோடியின் செல்வாக்கும் உயர்ந்திருக்கிறது. இதனால் முன்பு மூன்று சதவீதமாக இருந்த அக்கட்சியின் வாக்கு வங்கி தற்போது 6 சதவீதமாக உயர்ந்திருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

அதேநேரம் டிடிவி தினகரன், சசிகலா ஓபிஎஸ் மூவருக்கும் சேர்த்து மூன்று சதவீத ஓட்டுகள் வரை இருக்கும். பாமகவுக்கு இருக்கும் ஐந்து சதவீத வாக்கு வங்கியுடன் சேர்த்தால் இது 14% ஆகிறது. பாஜகவுக்கு சிறு சிறு கட்சிகள் மூலம் இன்னும் ஒரு சதவீத ஓட்டு கிடைக்கலாம். அதேபோல திமுக ஆட்சியின் மீது அதிருப்தி கொண்டவர்களின் ஓரிரு சதவீத வாக்குகளும் கிடைக்கும் நிலையும் காணப்படுகிறது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக 18 சதவீத ஓட்டுகள் வரை கிடைக்கலாம். அதன் மூலம் கடும் மும்முனை போட்டி நிலவினால் கூட நான்கு முதல் ஆறு தொகுதிகளை நம்மால் வெற்றி பெற்று விட முடியும் என தமிழக பாஜக கருதுகிறது.

இன்னொரு பக்கம் அதிமுக சரிபாதியாக பிளவு பட்டிருந்தால் நமது கூட்டணியால் 30 சதவீத ஓட்டுகளை பெற்று குறைந்தபட்சம் 25 தொகுதிகளை கைப்பற்றி விட முடியும் என்று அண்ணாமலை நம்புகிறார்.

எல்லாம் சரி! சீமானின் நாம் தமிழர் கட்சியை நான்காவது அணி என்று சொல்லக் கூடாதா? என்ற கேள்வி எழலாம்.

அதற்கு அரசியல் பார்வையாளர்கள் கூறும் காரணங்கள் இவை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே சொல்லவேண்டும். ஏனெனில் தனி ஈழ விவகாரத்தில், வைகோவின் மதிமுகவில் இருந்த 3 சதவீத தொண்டர்களையும் சீமான் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தன் கட்சி பக்கம் இழுத்து விட்டார்.

அதேபோல திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாத பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் இதுவரை நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து வந்தது. இனி அது அதிமுகவுக்கு போகலாம்.

மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவுக்கு வாக்களித்த பெண்களில் சுமார் இரண்டு சதவீதம் பேர் அவருடைய மறைவுக்கு பின்பு சீமானின் பேச்சு திறமையால் ஈர்க்கப்பட்டு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த காரணங்களால்தான் அவருக்கு அப்போது 6.67 சதவீத வாக்குகள் கிடைத்தன.

அதே நேரம் கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் முழுவதும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளிக்கு வந்ததுடன் அது பெரும் பேசு பொருளாகவும் மாறி மாநிலம் முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால் முந்தைய தேர்தல்களில் சீமானுக்கு வாக்களித்த பெண்களில் எத்தனை பேர் மீண்டும் அவருடைய கட்சிக்கு விரும்பி வாக்களிப்பார்கள் என்ற மிகப்பெரிய கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இது அவருடைய வாக்கு வங்கியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்லலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வாங்கிய 4 சதவீத ஓட்டுகளை மீண்டும் வாங்கினால் அதுவே பெரிய விஷயமாக இருக்கும். ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் அவருடைய கட்சியால் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு சவால் அளிக்க முடியும். தவிர இனி அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலில் வெற்றி காண்பதும் கேள்விக்குறியான ஒன்றாகிவிடும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 382

    0

    0