திமுகவின் நயவஞ்சகத்தினால் உங்களுக்கு அநீதியை இழைத்து விட்டோம்.. எடப்பாடியிடம் வருத்தம் கூறிய கிறிஸ்துவ அமைப்பு!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2023, 8:30 am
திமுகவின் நயவஞ்சகத்தினால் உங்களுக்கு அநீதியை இழைத்து விட்டோம்.. எடப்பாடியிடம் வருத்தும் கூறிய கிறிஸ்துவ அமைப்பு!
கோவை கருமத்தம்பட்டியில் நேற்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவரும், செபி பேராயத்தின் தேசிய தலைவருமான நோவா யுவணராஜ் தலைமை வகித்ததோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் திமுகவை நம்பி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிறிஸ்தவர்கள் அநீதி இழைத்துவிட்டதாக கூறி மேடையில் வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நோவா யுவணராஜ் பேசியதாவது: கிறிஸ்தவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாநாட்டில் சொல்ல உள்ளேன். மேடையில் 100க்கும் அதிகமான பேராயர்கள், ஆயர்கள் எல்லாம் அமர்ந்து உள்ளோம்.
நாங்கள் எல்லாம் திருச்சபைக்குள் இருந்தவர்கள். எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஜெபங்கள், அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், ஆனால் எதற்காக இன்று இப்படிப்பட்ட மாநாடு என்றால் இது அரசியல் மாநாடு அல்ல.
நேற்று இரவு பெரிய அச்சுறுத்தல் வரும்போது எஸ்பி வேலுமணியை வைத்து கொண்டு காவல் துறையிடம் நாங்கள் கூறியது என்னெவன்றால், நாங்கள் அனைவரும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள். நாங்கள் அனைவரும் சிறுபான்மை மக்களை வைத்து கொண்டு சிறுபான்மையினர் மாநாடு நடத்துகிறோம்.
எங்கள் மாநாட்டு பந்தலில் கட்சி கொடி, சின்னம், கட்சியின் அடையாளம் இருக்கிறதா? என்பதை வந்து பாருங்கள் என கூறினோம். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை, முன்னாள் முதல் அமைச்சரை எங்கள் விழாவில் சிறப்புரையாற்ற அழைத்து இருக்கும்போது எதற்காக இந்த அச்சுறுத்தல்? எதற்காக எங்களை பயமுறுத்துகிறீர்கள்? என சொல்லி இரவு 10.30 மணிக்கு நடுரோட்டில் நின்று போராடி கொண்டிருந்தோம்.
எனது அன்பான கிறிஸ்தவ மக்களே இரவு முழுவதும் பயணம் செய்து நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நம் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறது என சொல்வதற்கு சில ஆதாரங்கள் இருக்க வேண்டும். நாம் பொய் சொல்ல மாட்டோம். பொய் சொல்ல எங்களுக்கு தெரியாது. பொய் சொல்ல எங்களுக்கு கற்றுக்கொடுத்தது கிடையாது.
வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. சிறுமைப்பட்டவன் மீது சிந்தை உள்ளவன் பாக்கியவான். ஆகையால் சிறுபான்மையின மக்கள் மீது சிந்தை உள்ள நாயகனாக உள்ள ஒரு தலைவரை(எடப்பாடி பழனிச்சாமி) இங்கு அழைத்து வந்துள்ளோம்.
அப்படி என்னவெல்லாம் அநீதி இழைக்கப்பட்டது என்ன என்பதை நான் கூறுகிறேன். எதிர்க்கட்சி தலைவரிடம் நாங்கள் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் கடந்த தேர்தலிலேய உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டோம். அதனை மனதார ஒப்புக்கொள்கிறோம்.
அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் இப்போது ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்ற கழக அரசு சிறுபான்மையினருக்கு நாங்கள் தான் பாதுகாவலர். அவர்கள் (அதிமுக) தேசிய ஜனநாயக கூட்டணி. அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்களால் கிறிஸ்தவம் ஒருநாளும் பாதுகாக்கப்படாது எனக்கூறி நயவஞ்சகமான பேச்சால் எங்களை திசைதிருப்பினார்கள்” என வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.