ஜெயலலிதா சேலையை இழுத்தோமா? திருநாவுக்கரசர் நேரில் பார்த்தார் : நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2023, 10:59 am
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காரசாரமாக கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
அந்தவகையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சியான திமுக, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் பேசினார்.
இதற்கு, திமுகவினர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது, கடந்த 1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
பிரபல ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. சட்டமன்ற நிகழ்வுகளை பொய்யாக திரித்து, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.
பேரவையில் இப்படி செய்வதற்காக தனது வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்ததை உடனிருந்த திருநாவுக்கரசர் எம்பி அம்பலப்படுத்தினார் என முதல்வர் கூறியுள்ளார்.
அதாவது, திருநாவுக்கரசர் சட்டப்பேரவையில் பேசியது அவைகுறிப்பிலேயே உள்ளது. வாட்ஸ்அப் வரலாற்றை படித்துவிட்டு மத்திய அமைச்சர் பேசுவதாக முதலமைச்சர் குற்றசாட்டியுள்ளார்.
1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா நடத்தியது நாடகம் என்பது அவையில் இருந்த அனைவரும் நன்கு அறிவர் எனவும் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் கூறுகையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, தேர்தல் மேடையில் பேசுவது போல் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் காங்கிரஸ் கட்சியை மட்டுமே மோடி விமர்சித்துள்ளார். 2014 தேர்தலுக்கு முன் என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ அதே குற்றச்சாட்டை தான் 9 ஆண்டுகளுக்கு பின்னும் வைத்து கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எதிர்க்கட்சி தலைவர் பேசுவது போல் பேசியுள்ளார். நரேந்திர மோடி முகத்தை மட்டும் வைத்து இனி பாஜக வெற்றி பெற முடியாது என்றும் நரேந்திர மோடியின் பிம்பம் தகர்ந்துவிட்டதாகவும் முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், ஆளுநர் விவகாரம், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் முதலமைச்சர் பேசியுள்ளார்.
அதில் ஆளுநர் குறித்து பேசுகையில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, “குஜராத் ராஜ் பவன் காங்கிரஸ் மாளிகை” என்று கூறினார். இன்றைய நிலையில் ஆளுநர் மாளிகைகள் பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
“எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, உண்மையில் தனது எல்லையை மீறியிருக்கிறார். அதேபோல, “எனக்கு எந்த வேலையும் இல்லை” என்று வாதிடும் ஆளுநர் ரவி, தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் எனவும் குற்றசாட்டினார்.
மேலும் செந்தில் பாலாஜி கைது குறித்து பேசிய முதல்வர், பாஜக தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த போன்ற நிகழ்வுகளை அனைவரும் பார்க்கலாம்.
இந்த ஏஜென்சிகள் பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளை மட்டுமே குறிவைக்கின்றன. இத்தகைய விசாரணைகளுக்கு உட்பட்ட நபர்கள், பாஜகவுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்கிறார்கள், இதனால் சட்ட நடவடிக்கைகள் தடுக்கப்படுகிறது.
எனவே, இந்த கைதுகளை நாங்கள் ‘குற்ற விசாரணைகளாக’ பார்க்காமல் ‘அரசியல் விசாரணைகளாக’ பார்க்கிறோம். மேலும், அரசியல் வழக்குகளில் கைதானவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.