அதிமுகவின் முடிவை வரவேற்பதா?…மம்தா, பவார் மீது பாயும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 9:35 pm

அமைச்சர் உதயநிதி என்றைக்கு சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசு போல ஒழிப்போம் என்று ஆவேசமாக முழக்கமிட்டாரோ அன்று முதலே தேசிய அளவில் திமுகவுக்கு சிக்கல் முளைத்து விட்டது.

உதயநிதிக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

இந்துக்களின் சனாதன தர்மத்தை அவமதிப்பது போல் அவருடைய பேச்சு இருந்ததால் எதிர்க் கட்சிகளின் இண்டியா கூட்டணியிலேயே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அமைச்சர் உதயநிதியின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்று வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதேபோல் ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவையும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தன.

ஆனால் சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வாயே திறக்கவில்லை. சனாதன ஒழிப்பு விவகாரத்தை பாஜக தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதால் இண்டியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்ற வேண்டும் என்று மறைமுகமாக சில கட்சிகள் போர்க்கொடி உயர்த்தவும் செய்தன.

திமுகவுக்கு குடைச்சல் கொடுத்த மம்தா, சரத் பவார்

இந்த விவகாரமே இன்னும் ஓயாத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை எரிச்சலடைய செய்யும் விதமாக மம்தாவும், சரத்பவாரும் புதியதொரு பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிரந்தரமாக விலகிக் கொள்கிறோம் என்ற அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டது. அதிமுகவின் இந்த முடிவுக்கு உடனடியாக மம்தா வரவேற்பும் தெரிவித்தார்.

ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக அதிமுக இருந்ததால் அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று அவர் கருதுவதுதான்.

திமுக OUT அதிமுக IN?

அதுமட்டுமின்றி இண்டியா கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றிவிட்டு அதற்கு பதிலாக தமிழகத்தில் அதிமுகவை சேர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையையும் மம்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை வரவேற்று இருக்கிறார். இதையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் இண்டியா கூட்டணியில் அதிமுகவை சேர்த்துக் கொள்வீர்களா? என்று ஒரு கேள்வியை எழுப்பினர்.

சர்ச்சை பேச்சால் சிக்கிய சரத்பவார்

அதற்கு சரத்பவார், “இந்தியா” கூட்டணியில் மிக முக்கியமான கட்சி திமுக. ஆகையால் திமுக மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கலந்து ஆலோசிக்காமல் அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்” என்று பதில் அளித்தார்.

மூத்த தலைவர் ஒருவர் இப்படி கூறியிருப்பதன் மூலம், எங்களுக்கு அதிமுகவை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஆசைதான். ஆனால் எங்கள் கூட்டணியில் திமுக இருப்பதால் அதன் தலைவரிடமும் இதற்கு சம்மதம் பெறவேண்டிய நிலை உள்ளது என்பதை சரத்பவார் சுட்டிக் காட்டியும் இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தி

அவருடைய விளக்கம்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. ஏற்கனவே மம்தா பானர்ஜி, அதிமுக எடுத்த முடிவை வரவேற்ற நிலையில் இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவாரும் இப்படி கூறுகிறாரே? உண்மையிலேயே தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருப்பது அவருக்கு தெரியுமா?…தெரியாதா?… செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என்றுதானே அவர் பதிலளித்து இருக்கவேண்டும். அதைச் சொல்லாமல், இது பற்றி ஸ்டாலினிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பிறகு சொல்கிறேன் என்று சரத்பவார் எதற்காக கூற வேண்டும்? அதற்கு என்ன அர்த்தம்? இதில் உள்குத்து வேலை எதுவும் இருக்குமோ?” என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு வந்துவிட்டது.

இதனால்தான், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் சம்பந்தமே இல்லாமல் தாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் எங்களை யாராலும் பிரித்து விட முடியாது என்று விளக்கம் அளித்து இருக்கிறார்களோ என கருதவும் தோன்றுகிறது.

அதேபோல்தான் அதிமுகவும் பாஜகவும் நாடகமாடுகின்றன என்று உதயநிதி முதல் திமுக கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்கள் பேசுவதும் இருக்கிறது. நடப்பது நாடகம் என்றால் திமுக கூட்டணியில் உள்ள அத்தனை காட்சிகளும் எதற்காக இப்படி பதறி அடித்துக் கொண்டு நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்?

நீங்கள் திமுகவை வெளியேற்றினாலும், நாங்கள் ஒருபோதும் திமுக கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என்ற செய்தியை இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு சொல்வது போல் அல்லவா இது அமைந்து இருக்கிறது? என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

அதிமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக தீவிரம்

இந்த நிலையில்தான் பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுகவை சேர்ப்பதற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய மாநில தலைமையை மாற்றியமைப்பதன் மூலம் இது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.

“ஆனால் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைவதற்கான வாய்ப்பே கிடையாது என்பதை உறுதியாக சொல்லலாம்” அரசியல் விமர்சகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

INDIA கூட்டணியில் பலமாக இருக்கும் திமுக

“சனாதன ஒழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின்பு இண்டியா கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் திமுகவுக்கு எதிர்ப்பான மனநிலையில்தான் உள்ளன என்றாலும் கூட வெளிப்படையாக இதுவரை திமுகவை வெளியேற்றவேண்டும் என்று யாரும் கூறவில்லை. வேறு வழியின்றி அதை மனக்கசப்புடன் ஜீரணித்துக்கொண்டு கூட்டணியை தொடரும் நிலையில்தான் உள்ளன. இதற்குக் காரணம் தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதும் வலிமையான கூட்டணியை கொண்டிருப்பதும் என்றாலும் கூட நாடாளுமன்றத் தேர்தலின்போது தென் மாநிலங்களுக்கான இண்டியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கான செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று திமுக தலைமை உறுதியளித்து இருப்பதுதான் என்கிறார்கள்.

அதனால் சரத்பவார், மம்தா என யார் நினைத்தாலும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியிலிருந்து திமுகவை வெளியேற்றவும் முடியாது. அதிமுகவை உள்ளே கொண்டு வருவதும் நடக்காது.

விடாப்பிடியில் அதிமுக!!

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வெளியேறியதுதான். அதில் இனி மாற்றம் நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஒருவேளை மீண்டும் கூட்டணி அமைந்தால் அது இரு கட்சிகளுக்குமே பெரும் பாதிப்பதைத்தான் ஏற்படுத்தும். ஏனென்றால் பாஜகவில் உள்ள அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தொண்டர்களுடன் மனதார ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை செய்ய முன்வர மாட்டார்கள்.

அதேபோல அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் அந்த ஆதரவாளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகம்தான். இந்த வாக்குகள் ஒன்று பதிவாகாமல் போகலாம். அல்லது நோட்டாவை நோக்கி திரும்பலாம். வேறு கட்சிகளின் வேட்பாளருக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

அதேபோல்தான் பாஜக, போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததுடன் மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சராக ஆனார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் எனக் கூறியதையும் அதிமுக தொண்டர்கள் ரசிக்க வில்லை என்பது வெளிப்படை.

ஏனென்றால் அவர் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவர். கட்சியில் படிப்படியாக முன்னேறித்தான் முதலமைச்சர் என்கிற நிலைக்கே வந்தவர் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதிமுகவுக்கே பாதிப்பு

கூட்டணி தர்மம் கருதியாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதை அண்ணாமலை தவிர்த்து இருக்கலாம் என்றும் அவர்கள் வேதனையுடன் உள்ளனர்.
மேலும் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தால் அது யாருக்கு லாபமாக அமையும் என்பதை உணர்ந்தே அவர் இப்படி பேசி இருக்கிறாரோ என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தற்போது இரு தரப்பிலும் அமைதி நிலவுவதால் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிவிடும் என்று சிலர் பேசி வருகின்றனர்.

பழையபடி இரு கட்சிகளையும் மீண்டும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வந்து போட்டியிட வைப்பது எலியும் தவளையும் கதை போல் ஆகிவிடலாம். இதில் தேசியக் கட்சியாக இருக்கும் பாஜக எளிதில் தப்பிவிடும். ஆனால் மாநில கட்சியான அதிமுகவுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

சமரச முயற்சியை ஏற்றுக் கொண்டால் ஏற்கனவே திமுகவுடன் ரகசியமாக கைகோர்த்துக்கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு நான்காண்டு காலம் தீவிர முயற்சி மேற்கொண்ட டிடிவி தினகரனிடமும், ஒற்றை தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்து கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓ பன்னீர்செல்வத்திடமும் அதிமுகவை ஒப்படைத்தது போல ஆகிவிடும். கட்சி அவர்கள் வசம் சென்றால் அதிமுகவின் கதி என்னவாகும் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. சசிகலா போல இன்னொரு முறை அடிமைகளின் கூடாரமாக்கி அதிமுகவை அடியோடு ஒழித்து கட்டியும் விடுவார்கள்.

பாஜகவை கேலி பேசும் இண்டியா கூட்டணி

அதேநேரம் இதுபோன்றதொரு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்பதை புரிந்துகொண்டு டெல்லி பாஜக மேலிடம்தான் உடனடி நடவடிக்கையில் இறங்கி கூட்டணி முறிவை தடுத்திருக்கவேண்டும். ஆனால் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டு காலம் கடந்த பிறகுதான் மேலிட பாஜக தலைவர்கள் விழித்துக் கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. அதுவும் இண்டியா கூட்டணி கட்சிகள் தங்கள் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவுக்கு தெரியவில்லை என்று கேலியாக விமர்சிக்க ஆரம்பித்த பின்பே டெல்லி மேலிடம் இதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனால் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்டால் கூட அதை எடப்பாடி பழனிசாமி இனி ஒருபோதும் ஏற்க மாட்டார் என்று உறுதியாக கூறலாம். ஏனென்றால் அரசியலில் முன் வைத்த காலை பின் வைத்தால் அது எத்தகைய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

அதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் ஒரு அணியை உருவாக்கியும், அண்ணாமலை தலைமையில் பாஜக ஒரு அணியை உருவாக்கியும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும்தான் எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். இதில் வெற்றியோ, தோல்வியோ அவரவர் பலத்தை அவர்கள் நிரூபித்து விட்டு போகட்டும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 508

    0

    0