தென்காசி பாஜகவில் நடந்தது என்ன?… அதிர்ச்சியில் ஆனந்தன் அய்யாசாமி!
Author: Udayachandran RadhaKrishnan23 March 2024, 9:37 pm
திமுக, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த சலசலப்பே இன்னும் அடங்காத நிலையில் அடுத்ததாக தமிழக பாஜகவிலும் மெல்ல மெல்ல அது போன்ற முணுமுணுப்பு சத்தம் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பளிக்காத நிலையில் வேலூரில் சீனியர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு திமுக எம்பி சீட் ஒதுக்கியதும், இன்னொரு மூத்த அமைச்சர் கே என் நேருவின் மகன் அருணுக்கு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்ததும் பொது வெளியில் பெரும் பேசுபொருளாக மாறியது. ஏற்கனவே திமுகவில் வாரிசுகள் அடிப்படையில் கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் என நால்வரும் மீண்டும் போட்டியிடுவது திமுகவினருக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.
திமுக என்றாலே குடும்ப, வாரிசு அரசியல் என்றாகிவிட்டது. புதியவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிப்பதும் அரிதாகிவிட்டது என்ற மனக்குமுறல் அக்கட்சியினரிடம் முன்பை விட தற்போது வேகமாக ஒலிக்கிறது. ஏனென்றால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் தங்களது வாரிசுகளை களம் இறக்கினால் நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சம் அந்த திமுக நிர்வாகிகளுக்கு இப்போதே வந்துவிட்டதுதான்.
இப்படி தமிழகத்தின் பிரதான கட்சிகளில்தான் இந்த கூத்து என்றால், மாநிலத்தில் வலுவாக காலூன்ற நினைக்கும் பாஜகவிலும் இதுபோன்ற காட்சிகள் அரங்கேறுவதை காண முடிகிறது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பே பாஜகவில் தென்காசி தனித் தொகுதியை குறிவைத்து பிரபல சாப்ட்வேர் இன்ஜினியரான ஆனந்தன் அய்யாசாமி காய்களை நகர்த்தி வந்தார்.
திருச்சி என்.ஐ.டி.யில் படித்த அவர் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த இளைஞர். அமெரிக்காவில், ‘இன்டெல்’ நிறுவனத்தின் தலைமை பொறியியல் இயக்குனராகவும் பணியாற்றியவர். அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊர் திரும்பிய அவர், ‘வாய்ஸ் ஆப் தென்காசி’ என்ற அமைப்பை தொடங்கி சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த ஆனந்தன் அய்யாசாமி பாஜகவின் ‘ஸ்டார்ட் அப்’ பிரிவின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த அமைப்பை தமிழக பாஜகவில் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவரும் அவர்தான். மேலும் தென்காசி தொகுதி முழுவதும் ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்ற வாசகம் சுவர்களில் பளிச்சிடுவதற்கும் இவரே காரணம்.
இத்தனைக்கும் தென்காசியில் மிக எளிமையான மனிதர் என வர்ணிக்கப்படும் ஜோஹோ என்கிற இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர்வேம்புவின் ஆதரவையும் பெற்றவர். தவிர ஆர் எஸ் எஸ், சங்பரிவார் அமைப்புகளின் நன்மதிப்பும் ஆனந்தன் அய்யாசாமிக்கு நிறையவே உண்டு.
ஆகையால் அவருக்குத்தான் தென்காசி வழங்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கியும் விட்டனர்.
இதன் பின்னர்தான் பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமியிடம் உங்களுக்கு தென்காசி தொகுதி கிடைக்க வாய்ப்பே இல்லை,வேறு தொகுதியில் போட்டியிட சீட் தருகிறோம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிட டாக்டர் கிருஷ்ணசாமி அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிலையில் அவருக்கு இந்த தகவல் மிகவும் ஷாக் தருவதாக இருந்தது.
இதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.
எனவே ஆனந்தன் அய்யாசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பாஜக வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்த்தின் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஆனந்தன் அய்யாசாமியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தென்காசியில் அவர் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைத்துவிடும். அப்படி நடந்து விட்டால் தமிழக பாஜகவில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக ஆனந்தன் அய்யாசாமி உருவாகிவிடுவார். அதை தடுப்பதற்காகவே பாஜகவில் சிலர் திட்டமிட்டு அவருக்கு தென்காசி தொகுதி கிடைக்காமல் தடுத்துவிட்டனர் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.
இதேபோல காங்கிரஸில் விளவங்கோடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த மாதம் பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அத்தொகுதியை ஒதுக்குவதாக உறுதி அளித்தால்தான் அவர் பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவருடைய விருப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கன்னியாகுமரி தொகுதி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன் ராதாகிருஷ்ணனுக்கு 9வது முறையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று விஜயதாரணி நினைத்தால் அது பாஜகவில் நந்தினி என்ற வேட்பாளருக்கு வழங்கப்பட்டு விட்டது.
இதை பாஜகவில் சேர்வதற்காக சென்றமாதம் தலைநகர் டெல்லியில் பத்து நாட்கள் முகாமிட்டிருந்த விஜயதாரணிக்கு விழுந்த பலத்த அடி என்றே அரசியல் வட்டாரம் கூறுகிறது.
இதைவிட அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பாஜகவில் பிரபல பேராசிரியராக அறியப்படும் ராம சீனிவாசன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடாது. மண்ணின் மைந்தர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்
என்று மாநில பாஜக ஓபிசி பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா மிக அண்மையில் தனது எக்ஸ் வலைத்தள பதிவில் வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார். இதற்கு ராம சீனிவாசனும் பதிலடி கொடுத்தார். ஆனால் கடைசியில் இந்த மோதலில் வெற்றி பெற்றது என்னவோ சூர்யா சிவாதான். ஏனென்றால் ராம சீனிவாசனுக்கு தற்போது மதுரை தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக திகழ்ந்துவரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடந்த ஆறு மாதங்களாகவே நாங்கள் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று கூறி வந்தார்.
தனக்கு தென் மாவட்டங்களில் அமோக செல்வாக்கு இருப்பதாக கருதி பாஜகவிடம் முதலில் ஆறு தொகுதிகள் கேட்டார். பிறகு நான்கு, இரண்டு என இறங்கி கொண்டே வந்தார். ஆனால் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் மூன்று தொகுதிகள் வரை ஒதுக்க தமிழக பாஜக தயாராக இருந்தது. ஆனால்ஓ பன்னீர்செல்வம் அதற்கு மறுத்ததால் ஒரேயொரு தொகுதியை மட்டும் கொடுத்துள்ளது. அதுவும் அவருக்கு சம்பந்தமே இல்லாத ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.
“தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டுமென நினைக்கும் பாஜகவில் இதுபோல நடப்பது நடுநிலையாளர்களிடம் தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும். அது பாஜகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் அமையும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.