சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன? மீட்பு பணிகளில் மீண்டும் தொய்வு : பரபர தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 9:47 pm

சுரங்கபாதையில் சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன? மீட்பு பணிகளில் மீண்டும் தொய்வு : பரபர தகவல்!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 12ம் தேதி வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்குள் அங்கு குவிந்தன. சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.

இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று கொண்டு இருந்த போது, கடந்த 17 ஆம் தேதி சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த சத்தம் ஏற்பட்டது. இதனால் ஷாக் ஆன மீட்புக்குழுவினர் பணியை நிறுத்தினர். அதன்பிறகு, எதிர்முனையில் இருந்து துளையிடுவது, சுரங்கப்பாதை அமைக்கப்படும் மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடுவது போன்ற மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் கிடைமட்டமாக இரும்பு குழாய்களை செலுத்தி தொழிலாளர்களை மீட்பதில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டினர்.

இதன்படி, இடிபாடுகளுக்குள் துளையிடும் பணி நடந்து வந்தது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஏற்கனவே 4 அங்குல குழாய் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குழாய் செலுத்தப்பட்டு அதற்குள் தொழிலாளர்கள் வீடியோ எடுக்கப்பட்டனர். இந்த வீடியோவை பார்த்த பிறகே தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனையடுத்து நேற்று காலையில் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுவிடுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெளியே வரப் பெரிய குழாய்களை உள்ளே இறக்கி அதன் வழியாக அவர்களை வெளியே எடுத்து வருவதே திட்டமாகும். இதற்காக ஒரு மணி நேரத்தில் சுமார் 3 மீட்டர் வரை துளையிடும் ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தினர். இருப்பினும், இன்று அதிகாலை அதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து உலோக கட்டரை பயன்படுத்தி அந்தப் பிரச்சினையைச் சரி செய்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தொடர்ந்து அந்த பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

எஞ்சிய இடிபாடுகள் மிக கடினமாகவும், கம்பிகளாகவும் இருப்பதால் எந்திரம் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியினை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு குழுவினர், வேறு எந்திரம் அல்லது கையால் மீட்பு பணிகளை தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 341

    0

    0