ஆளுநர் கூறுவது அப்பட்டமான பொய்… முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி : அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 8:58 am

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த மூன்றாம் தேதி கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கு ஆளுநர் நேற்று பதில் கூறி ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் குறித்து அமைச்சர் ரகுபதி நேற்று ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புகளில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளன என குற்றம் சாட்டினார்.
மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்றும், முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் விசாரணைக்கு இசைவாணை கேட்டு எந்த கோரிக்கையும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இது உண்மை இல்லை என அமைச்ச ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணை கோப்புகள் மொத்தமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோப்பில் லஞ்ச ஒழிப்பு துறையின் இறுதி விசாரணை அறிக்கை இணைந்துள்ளது. 298 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட இறுதி விசாரணை அறிக்கை பெற்றுக் கொண்டு பெற்று கொண்டதற்கான கையெழுத்தையும் போட்டுவிட்டு, தற்போது விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல என அமைச்சர் விமர்சித்து இருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இவ்வளவு வேகமாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஆளுநர் ரவி, ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணையை தொடர அனுமதிக்காமல், அதற்கு கையெழுத்திடாமல் ஏன் மறுத்து வருகிறார் என்பது தெரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான லஞ்ச ஒழிப்பு துறையின் இறுதி விசாரணை அறிக்கை கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனையும் பெற்றுக் கொண்டு அதற்கான ஒப்புதல் அளித்துவிட்டு தற்போது விசாரணை அறிக்கை வரவில்லை என கூறுவது விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளது என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

அடுத்ததாக, ஆளுநர் அரசியல் சாசனப்படி பணிகளை செய்வது விட்டு விட்டு, கட்சி அரசியல் பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பது அவர் கூறிய இந்த காரணங்கள் வாயிலாக தெரிகின்றன. ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் ராஜ்பவன் அலுவலகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இல்லையா என கேள்வி எழுப்புகிறது.

அனைத்து ஆதாரத்துடன் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்கு தேவையான ஆணையை வழங்குமாறு சிபிஐயிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் மாநில அரசுக்கு வந்துள்ள கடிதம் பற்றிய விவரத்தையும் எடுத்து கூறி அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள அதற்கான இசைவாணையை வழங்குமாறு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறேன் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!