தமிழகத்துக்கு என்ன செஞ்சீங்க? பட்டியல் போட தயாரா? அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 8:59 pm

சேலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம்; எனது வாழ்வில் மறக்க முடியாத ஊர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட உள்ளோம். கருணாநிதி நூற்றாண்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். குறிப்பாக சேலத்தில் வென்றாக வேண்டும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை மக்கள் அகற்றிவிட்டு அதனை நம்மிடம் வழங்கியுள்ளனர்.

திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இனி இந்த மண்ணில் திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் பெருவாரியாக வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும்.

உழைப்பிற்கான அங்கீகாரம் நிச்சயமாக கட்சியினரை வந்து சேரும். நாடும் நமதே, நாற்பதும் நமதே இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு என அலட்சியம் வேண்டாம்.

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர இருக்கிறது. அதற்கு திமுகவினர் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலையொட்டியே மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வருகிறார்.

தமிழகத்திற்கு என்ன செய்தனர் என்பதை சென்னைக்கு வரும் அமித்ஷா பட்டியலிட வேண்டும். மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை பெற்று தந்தோம்.

காலத்தின் சூழல் மாறிவிட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை மக்களிடம் சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி தொடர்பாக பொய்யாக பரப்பும் தகவல்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கட்சியினரின் பிரச்சனைகளை தீர்க்காவிடினும் காது கொடுத்து கேட்க வேண்டும் என கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி